Tuesday, September 17, 2013

4. மனக்கோளாறுகள் எத்தனை வகை? 

  உலகத்தில் உள்ள நோய்களை எல்லாம் கண்டுவகைப்பகுத்துவரிசைப்படுத்தி அட்டவணைப் படுத்துயுள்ளார்கள்இப்படி அட்டவணைப் படுத்திய வியாதிகள்தான் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்இதற்கு நோய்களின் பன்னாட்டு வகுப்பொழுங்கு (International classification of diseases) என்று பெயர்அடிக்கடி புதிய ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் திருத்தங்கள் செய்து சீராக்குவார்கள்இதை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகிறதுஐரோப்பாவிலும் நம் நாடுகளிலும் இதுவே பின்பற்றப்படுகிது. 1992ல் இதன் 10வது பதிப்பு வெளியிடப்பட்டதுஇதன் 11வது பதிப்புக்கான திருத்தங்கள் தற்போது செய்யப்பட்டும் பிரசுரிக்கப் பட்டும்  வருவருகின்றனஇது முழு அளவில் 2015ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇவ்வகைப்பாடு மனக்கோளாறுகளுக்கு மட்டுமின்றி சகல வியாதிகளையும் உள்ளடக்கியதுஇந்த ஆவணத்தில் 300ருக்கு அதிகமான மனக்கோளாறுகள் பட்டியலிடப் பட்டிருக்கிறனஇதில் சில முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்இதே போல, வட அமெரிக்காவில் DSM5 (2013)என்ற வகைப்பாடு பாவிக்கப்படுகிறது [2]. இவை இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை.
உடல் நோய்கள் போலவேமனக்கோளாறுகளிலும் நூற்றுக் கணக்கான நோய்களும் கோளாறுகளும் உள்ளனஇவைகளை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் இரண்டு பெரும் பிரிவுகளாக வகுக்கப் பட்டுள்ளனஒன்று மனப் பிறழ்வு நிலைகள் (psychoses) எனும் கடும் மனக்கோளாறுகள் , மற்றது நரம்புத் தளர்ச்சி (neuroses) எனப்படும் பொது மனக்கோளாறுகள்.

மனப் பிறழ்வும் நரம்புத் தளர்ச்சியும்

இந்த வகைப்பாடு மிகப் பழமையானது ஆயினும் இந்த அடிப்படை வித்தியாசம் முக்கியமானது. இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம். தற்போது இவை முறையே கடும் அல்லது முதிர் மன நோய்கள் (severe mental illnesses) என்றும் பொதுவான அல்லது மிதமான மனக்கோளாறுகள் (common mental disorders) எனவும் அழைக்கப்படுகின்றன.


மனப் பிறழ்வு நிலைகளில் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்தும், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். தான் என்ற சுயத்துக்கும் வெளி உலகுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிதைந்து போவதே இதற்க்குக் காரணம். தன் மன வெளியில் ஏற்படும் அனுபவங்களுக்கும் புறஉலக யதார்த்தங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அகத்துக்கும் புறத்துக்கும் இடையே ஊள்ள வித்தியாசம் சிதைந்து போவதே மனப் பிறழ்வுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். எனவே, இவர்கள் தன்னிலை (insight) அறிவதில்லை. மற்றவர்கள் இதை சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.


இயல்பு வாழ்க்கையில் நாம் நமக்குள் சிந்திகிறோம், சில சமயங்களில் நாம் நமக்குள்ளே பேசிக் கொள்வகிறோம். இந்த உள் உரையாடல்கள் மற்றவர்கள் அறியாதவை. ஆனால், பிறழ்வு நிலைகளில் இவை மற்றவர்களின் குரல்களாக, 'மாயக் குரல்களாக' (auditory hallucination) ஒலிக்கும், பிறழ் நம்பிக்கைகள் (delusions) உருவெடுக்கும். இதனால் இந்த நிலையில் உள்ளவர்களின் சிந்தனை, புலணுனர்வு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதினால் இவர்களின் செயல்கள் அர்தமற்றவையாக பிறருக்குத் தோன்றும்.
 உதாரணத்துக்கு, மனப் பிறழ்வு நிலையில் இருந்த ஒருவரின் அனுபவம்:
என்னை ஏன் மற்றவர்கள் வினோதமாகப் பார்க்கிறார்கள்? ஏதோ சதி நடக்கிறது. இவர்கள் என் விரோதிகள். அவன் என்னைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிக்கிறான், என்னைப் பற்றி எனென்னவோ பேசிக் கொள்கிறார்கள். ஒருவன் என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறான். 'போதும், வாயை மூடு' என்று சொன்னாலும் அவன் கேட்பதாகத் தெரியவில்லை".
பிறழ் மனநிலையில் இருந்து மீண்டதும் இந்த அனுபவம் அவருக்கே வினோதமாகத் தோன்றியது. “நானா இப்படி நடந்து கொண்டேன்?” என்று கேட்டார்

மாறாக, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் சாதாரண, இயல்பான உணர்நிலைகளின் மிகையான வெளிப்பாடுகளே ஒழியே வேரொன்றும் இல்லை (வரைபடம் 1) சாதாரண அனுபவங்களான பற்றம், அச்சம், மனச் சஞ்சலம் போன்ற உணர்நிலைகள் எல்லை மீறிய அளவில் உண்டாகும் போது தனி ஒருவருக்கு வேதனையும் துன்பமும் ஏற்படலாம், அவர் செயல்பாடுகளும் பாதிக்கப் படலாம். ஆனால் தனது அனுபவத்தை அவர் மறுப்பதில்லை. அவர் அவதிப் படுவது உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும் தன்னிலை உணர்வு அவருக்கு உண்டு. இவற்றை மனநோய்கள் என அழைப்பது தவறு, மனக்கோளாறுகள் என்று கூறுவதே பொருந்தும். மேலும், பிறழ் மனநிலைகளுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை வலியுறுத்த உதவும். இதனால்தான் இவை பொது மனக்கோளாறுகள் என்று அழைக்கப் படுகின்றன.

மனப் பிறழ்வுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் இடையே உள்ள இந்த வித்தியாசங்கள் முக்கியமானவை என்றாலும்சில சமயங்களில் இவை இரண்டும் கலந்து காணப்படுவதும் உண்டுஆனால்இப்போதைக்கு எளிமை கருதி இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பது நல்லதுஇந்த வலைப்பூவில் மனநோய் என்ற சொல் மனப் பிறழ்வுகளை உள்ளடக்கிய கடும் மனக்கோளாறுகளுக்கு மட்டும் உபயோகிக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் மனக்கோளாறுகள் என்று பெயரிடப்பட்டுள்ளன. 


வரை படம் 1. மனச்சோர்வு சாதாரண மனச்சஞ்சலத்தின் மிகையான வெளிப்பாடே





















தனித்தனி மனக்கோளாறுகளைப் பற்றி ஆராயுமுன் அவற்றை பின்வருமாறு வகைப் படுத்தி மனதில் பதிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:

                மனக்கோளாறுகள்: ஓர் எளிய வகைப்பாடு

                 (முக்கிய சில கோளாறுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன)



னி சில முக்கியமான மனக்கோளாறுகளை மேலோட்டமாகப் பார்ப்போம். 

மனப்பிறழ்வு மனநிலை (psychosis) காணப்படும் மனநோய்கள் பல உண்டு. அதிஷ்டவசமாகபிரதானமாக இரண்டு மனக்கோளாறுகளில் மட்டுமே நோய்களிலேயே பிறழ் மனநிலை காணப்படுகிறதுஒன்று மனச்சிதைவு (schizophrenia)மற்றது இருமுனையக் கோளாறு (Bipolar disorder; manic depression) [இவற்றுக்கு இடைப்பட்ட மனக்கோளாறுகளும் உண்டுஇப்போதைக்கு இவைகளைத் தவிர்த்துக் கொள்வோம்] இவை இரண்டும் கடும் மனக்கோளாறுகள். இவற்றை மனநோய்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்தது, நரம்புத் தளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படும் மனக்கோளாறுகள். இதில் மனச்சோர்வும் (depression) பதற்றக் கோளறுகள் (anxiety disorders) முக்கியமானவை. இதைப் போலவே, எந்த வித  உடல் அல்லது மனம் சார்ந்த நோய்களும் இன்றி  உடல் வலி, களைப்பு, மூட்டு வலி, தலை வலி போன்ற  நோய்க் குறிகள் காணப்படும்  ஒரு மனப் பாதிப்பும் உண்டு. இவை உளவியல் காரணங்களால் உண்டாகின்றன என்று நம்பப்படுவதால் உளவியல் சார்ந்த உடல் கோளாறுகள் (psychosomatic disorders; somatoform disorders) என்று அழைக்கப்படுகின்றன. மனம் சார்ந்த பிரச்சினைகள் உடல் வழியாக வெளிப்படுவதனால் இது உடலாக்கம் (somatisation) என்று வழங்கப் படுகிறது. இவை நம் நாடுகளில் கூடுதலாகக் காணப்படுகிறன. மருத்துவர்களுக்கு பெரும் தலையிடியாக (!) இவை இருந்து வருகின்றன. 


பிற மனக்கோளாறுகள்

மனத்தேய்வு (dementia)  என்பது பொதுவாக முதுமையில் ஏற்படும் மறதி நோய்.    இதில் அல்சைமர் மறதி நோய் (Alzheimers disease) முக்கியமானது. மூளையில் மெதுவாக ஏற்படும் தேய்வு (degeneration) மறதியையும் பிற குண மாற்றங்களையும் உண்டாக்கும். இது குணமாக்க முடியாத ஒரு நோய். 

மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் ஒரு முக்கிய விளைவு சார்பு நிலை (dependance). இதுவும் ஒரு மனக்கோளாறாகக் கருதப்படுகிறது. 

இவற்றைத் தவிர, உளவியல் காரணங்களால் எற்படும் பாலியல் கோளாறுகள் (psychosexual disorders), உண்ணல் கோளாறுகள் (eating disorders), ஆளுமைக் கோளாறுகள் (personality disorders) ஆகியவையும்  மனக் கோளாறுகளாகக் கருதப்படுகின்றன. 

குழந்தைகளுக்கும் குமரப் பருவத்தினருக்கும் ஏற்படும் மனக்கோளாறுகள் (Child and Adolescent Mental Health Disorders) பல உண்டு. இதில் சில வயது வந்தவர்கள்களுக்கு ஏற்படும் கோளாறுகள், மற்றவை இப்பருவத்தினருக்கு பிரத்தியேகமானவை. குழந்தைகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு கோளாறு அவதானக் குறைபாடும் மிகைச் செயலும் (Attention Defeceit Hyperactivity Disorder; ADHD)  என்பது. 
 இதைத் தவிர பல வளர்ச்சிக் குறைபாடுகளும் காணக் கிடைக்கின்றன. மன வளர்ச்சிக் குறைபாடு (mental retardation) ஒரு மனநோயே அல்ல. அது குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. தற்போது இதை அறிவாற்றல் குறைபாடு  (intellectual disability) என்று அழைப்பதே சரியானது என்று கருதப்படுகிறது.  சிறார்களுக்கும் குமரப் பருவத்தினருக்கும் காணப்படும் கற்றல் குறைபாடுகள் பல. இதில் dyslexia என்ற வாசிப்பு குறைபாடு முக்கியமானது. இன்னொரு வளர்ச்சிக் குறைபாடு ஆட்டிசம் ஆகும். 


[1] American Psychiatric Association (2013) Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th ed.; DSM-5) Washington, DC: Author.
[2]  World Health Organization, (2004). International Statistical Classification of Diseases and Health Related Problems (ICD 10). Geneva: World Health Organization.






Sunday, September 15, 2013




3. மனக்கோளாறுகள் என்றால் என்ன?







     அவ்வப்போது எல்லோருக்கும்பற்பல காரணங்களுனால் மனச் சஞ்சலங்களும் அவஸ்தைகளும் ஏற்படுவதுண்டுசாதாரணமாக இந்த உணர்நிலைகள் வெகு நாள் நீடிப்பதில்லைஎமது அன்றாட வாழ்க்கையை குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பதும் இல்லை. இவை நாளார்ந்த வாழ்க்கையின் 'மேடு பள்ளங்கள்' என்று கருதப்படுகின்றன

   ஆனால் சில வேலைகளில் இவை மனக்கோளாறுகளாக உருவெடுக்கலாம். உதாரணமாக, எல்லோருக்கும் அவ்வப்போது சில மனக் கவலைகளும் மன வேதனைகளும் ஏற்படுவதுண்டு. இதனால் உறக்கம் குறையலாம், பசி மந்தமாடையலாம். உடல் களைப்புறலாம். தலை வலி போன்ற சிறு உடல் உபாதைகளும் உண்டாகலாம். இதே மாதிரியான அனுபவம் அடிக்கடி ஏற்படுமானால், அல்லது பல வாரங்களாக, மாதங்களாகத் தொடருமானால், இதனால் தினசரி வாழ்க்கை பாதிக்கப் படுமானால், அதை ஒரு மனக்கோளாறு என்று கருதலாம்.

  • பார்வதிக்கு வயது 35. கடந்த ஆறு மாதங்களாக உடல் களைத்துப் போகிறது. சாதாரண வீட்டு வேலை செய்வது கூட பெரும் பாடாய் இருக்கிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தவுடன் உடல் சோர்ந்து படுக்க வேண்டி இருக்கிறது. உடல் வலி வேறு. பசி எடுப்பது குறைவு. உடல் இளித்துவிட்டது. இரவில் உறக்கம் வருவது இல்லை. காரணம் இல்லாமல் அழுகை அழுகையாய் வருகிறது. அவள் கணவனுக்கு அவளை வெறுத்துப் போய் விட்டது, தன்னால் எவருக்கும் பிரயோசம் இல்லை என்ற உணர்வு பாடாய்ப்படுத்துகிறது. காலையில் விழித்ததும் இன்னொரு நாளை எப்படி ஒப்போத்துவது என்று மலைப்பாய் இருக்கிறது. செத்துப் போய் விடலாம் போல் தோன்றுகிறது. 
  • மாதவன் ஓரு முச்சக்கர வண்டி ஓட்டுனர். இரவு பகலாக உழைத்து, ஓரளவு கடனும் பெற்று தனக்கென ஒரு வண்டி வாங்கி பெரும் உற்சாகத்துடன் சொந்தத் தொழில் ஆரம்பித்தார். நல்ல வருமானமும் வந்துக்கொண்டு இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாய் ஒரு சாலை விபத்தில் கால் எலும்பு முறிவுடன் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கால் சுகமாகி வீட்டுக்கு வந்த பின் நடக்க முடிந்தது. ஆனால் வீதியில் இறங்கியதும் வாகனங்களின் இரைச்சல் தாங்கமுடியாமல் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி இருந்தது. விபத்தின் போது வண்டி குடை சாய்ந்ததும் தான் தலை கீழாக உருண்டதும் திருப்பத் திரும்ப கண் முன் வந்து படம் போல ஓடியது. உடல் உதறல் எடுத்து வியர்துக் கொட்டியது.இரவில் அக்காட்சி கனவிலும் வந்து அவனைப் பயமுறுத்தியது. கிறீச் என்ற சிறு சத்தம் கூட அவனைத் திடுக்கிட வைத்தது. கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் வண்டியை இழக்கலாம் என்ற கவலையும் அவனைச் சூழ்ந்து கொண்டது. உடல் காயம் குணமாகி ஒரு வருடமாகியும் வெளியில் போக முடியவில்லை.  
  • சக்திவேல் ஓர் இராணுவச் சிப்பாய். சிறப்புப் பயிற்சிக்காக இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டார். பெரும் எதிர்பார்ப்புடன் பயிற்சி முகாமுக்குச் சென்றார். ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரை வெவ்வேறு பயிற்சிகள் இருந்தன. கடுமையான உடல் பயிற்சிகள், போர் உத்திகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. கடுமையாக் உழைத்தபோதும் உயர் அதிகாரிகள் மிகக் கறாராக நடந்து கொண்டார்கள். ஒரு நாள் உயர் அதிகாரி வகுப்பு நடத்திக் கொண்டு இருந்த போது சக்திவேலுக்கு மனம் பதறத் தொடங்கியது. இனமறியாத பயம் ஒன்று அவரைச் சூழ்ந்து கொண்டது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வகுப்பை விட்டு வெளியே வந்த போது ஒரு குரல் கேட்டது. யாரும் அருகில் இருக்கவில்லை. "நீ இப்போது வகுப்பில் இருந்து வெளியே வந்து விட்டாய்" என்று அந்தக் குரல் கூறியது. தெட்டத் தெளிவாக வெளியில் இருந்து வந்தது அந்தக் குரல். "அடுத்து நீ கதவைத் திறக்கப் போகிறாய்" என்று அவர் செய்யும் செயல்களை ஒரு நேரடி வர்ணனை போல திருப்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அதே குரல் பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தது.  ஒரு நாள் அவர் நண்பன் "யாரோடு  பேசுகிறாய்?" என்று கேட்டான். ஏன் அப்படிக் கேட்டான் என்று அவருக்கு விளங்கவில்லை. அதன் பிறகு எல்லோரும் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பதாக அவருக்குப் பட்டது. அவர்கள் தன்னைப் பற்றி தம்மிடையே பேசிக் கொள்கிறார்கள் என்று சந்தேகிக்கத் தொடங்கினார். "அவனைப் பார். உன்னைப் பற்றிதான் பேசிக் கொள்கிறார்கள்" என்று அந்த குரலும் கூறியது. தனக்கு இராணுவத்தில் தண்டணை பெற்றுத் தர ஏதோ சதி நடக்கிறது என்று எண்னத் தொடங்கினான். முகாமை விட்டு ஓடிவிட முயற்சித்தபோது கைது செய்யப் பட்டார். இப்போது பல குரல்கள் கேட்கத் தொடங்கின. காவலில் இருந்த போது அவர் நடத்தை தாறுமாறாக இருப்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டான்.  
மேலே கூறிய மூவருக்கும் ஏற்பட்டு இருப்பது ஏதோ ஒரு வகையான மனக்கோளாறு.

வீட்டுத் தலைவியான பார்வதிக்கு உண்டாகி இருப்பது மனச்சோர்வு (depression); முச்சக்கர வண்டி ஓட்டடுநர் மாதவனுக்கு எற்பட்டிருப்பது அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தக் கோளாறு (Post-traumatic stress disorder; PTSD). இராணுவத்தில் பணிபுரியும் சக்திவேலுக்கு உருவாகி இருப்பது மனச்சிதைவு (schizophrenia). இதிலிருந்து மனக்கோளறுகள் பல வகைப்பட்டன, ஆனாலும் எல்லா மனக்கோளாறுகளுக்கும் பொதுவான சில பண்புகள் உண்டு என்று தெரிய வரும். 

எனவே, மனக்கோளாறுகளை மூன்று குணாம்சங்களைக் கொண்டு வரையறுக்கலாம்:

1. சிந்தித்தல், உணர்தல், புலனறிதல் போன்ற மூளையின் உயர்நிலை செயற்பாடுகளில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக பேச்சிலும் செயலிலும் முன் இருந்த நிலையை விட குறிப்பிடும்படியான மாற்றங்கள் தென்படுதல்.

2. இதனால் தனக்கும் பிறருக்கும் மன வேதனையும் துன்பத்தையும் ஏற்படுத்துதல்.

3. தன் மனதில் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களினால் அன்றாட வாழ்க்கைக் கடமைகள், பணி புரிதல், குடும்ப உறவுகளைப் பேணுதல் ஆகியவை பாதிக்கப் படுதல்.

       இம்மாறுதல்களுக்கு உடல் நோய்கள் காரணமாக இருப்பதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.


சொற்பிரயாகம்: மனநோயா, மனக்கோளாறா?


       மனநோய் என்றால் என்ன என்று ஆராயப் புகு முன் ஒரு விளக்கம். மனதில் ஏற்படும் எல்லா பாதிப்புகளையும் மனநோய்கள் என்று பெயரிட்டு அழைப்பது தவறு. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த, மருத்துவரீதியான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும்; உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும்; ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்

        ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவில்லை; ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மறபணுகள் வெவ்வேறு மனநோய்களைத் தோற்றுவிக்கின்றன [1]. (மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் உடற்கூறு பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை! மனக்கோளாறுகளுக்கு மூளையில் மின் தூண்டல் கடத்திகளின் (neuro-transmitters) என்ற வேதிப்பொருள்களில் ஏற்படும்  மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ள போதிலும், அம்மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை
உலகளவில் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளிலும்  mental disorders என்ற சொற் பிரயோகமே பாவனயில் உள்ளதுகடும் மனக்கோளாறுகளை மனநோய்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம் (அடுத்த பதிவைப் பார்க்க). ஆனால் எல்லா மனக்கோளாறுகளும் மனநோய்கள் அல்ல. மேலும், நம் சமுதாயத்தில் ஒருவருக்கு மன நோயாளி என்ற பட்டம் சூட்டுவதால் உண்டாகும் விளைவுகள் கொடூரமானவை. எனவே, மனக்கோளாறுகள் என்ற பதமே இங்கு பொதுவாகப் பயன் படுத்தப்படுகிறது.

வாசகர்கள் மனநலம் சார்ந்த நல்ல தமிழ் கலைச் சொற்களை முன்மொழிவார்களானால் அதை தீவிரமாக கருத்தில் கொள்ள தயாராக உள்ளேன். முந்திய பதிவு ஒன்றில் கூறியது போல, இது ஒரு முயற்சியே தவிர முடிவல்ல. தமிழில் உத்தியோக பூர்வமான கலைச்சொற்களை உருவாக்ககுவது  அரசாங்கத்தின் கடமை. இதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. அது நடைபெரும் வரை நாம் எழுதிக் கொண்டே இருப்போம். 

அடுத்து எத்தனை வகையான மனக்கோளாறுகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.


















Tuesday, September 10, 2013



2. மனநலம் என்றால் என்ன?

           

ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மனதில் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. ஆனால், மனிதன் மகிழ்ச்சியான, நிறைவான, நிம்மதியான வாழ்க்கையையும், தனக்கு நெருங்கியவர்களுடன் வளமான உறவுகளைப் பேணுவதையும், தன் திறமைகளை வளர்துக் கொள்வது பற்றியும், தான் வாழும் சமுதாயத்துக்கு தன்னால் முடிந்ததை செய்வதையுமே மிக உயர்ந்த லட்சியமாகக் கருதுகிறான். இவை பெரும்பாலும் மனநலம் சார்ந்தவை. இருந்தும் நாம் இவற்றைப் பற்றி அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை.

       ஆரோக்கியம் என்பது உடல் நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்கியது என்பதை உணராதும், இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தது, ஒன்றில்லாமல் மற்றது இல்லை எனபதை விளங்கிக் கொள்ளாததுமே என்பதை இதற்குக் காரணம்.

 “ஆரோக்கியம் என்பது நோய்கள் அல்லது சுகாதார கேடின்றி இருப்பது மட்டுமல்ல; சுகாதாரம் என்பது உடல், மனம், சமுதாயம் மற்றும் ஆன்மீக நலன்களையும் உள்ளடக்கியது” என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) சுகாதாரம் பற்றி வரையறுத்துள்ளது. அனாலும் மனநலத்தை புறக்கணிக்கும் மனப்பாங்கு நம்மிடம் வேறூன்றிப் போயுள்ளது.

        இன்னொன்று. உடல் நலத்தையும் மனநலத்தையும் பிரித்துப் பார்ப்பதும் தவறு. உடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கூடுதல் அளவில் மனச்சோர்வு போன்ற மனக்கோளாறுகள் உண்டாகின்றன. அதேபோல, மனக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு உடல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மனச்சோர்வு காரணமாக இருதய மற்றும் இரத்தநாள நோய்கள் உருவாகின்றன என்று சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது


     இடைச் செருகலாக, மனம் பற்றி சில சொற்கள். மனம் என்றால் என்ன என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதை வரையறுப்பது கடினமான ஒரு காரியம். இதை ஞானிகளுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் விட்டுவிட்டு, மனதின் செயல்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம். ஏனென்றால் மனதின் இயல்பான செயல்பாடுகளை அறிந்து கொண்டால்தான் மனக்கோளாறுகளில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியும், ஓர் இயந்திரத்தில் உள்ள பழுதை கண்டுபிடிக்கு முன் அது நன்றாக இருந்தபோது எப்படி செயல்பட்டது என்று அறிந்து கொள்வதைப் போல.
   
     மனதின் உறைவிடம் மூளை. மூளையின் உயர்நிலைச் செயல்பாடுகளான  (கீழ்நிலைச்  செயல்பாடுகள் என்பன உடல் அசைவு, உணர்வு போன்றவை) சிந்தித்தல் (thinking), புலனறிவு (perception) அதாவது, ஐம்புலன்களால் பெற்றதை அறிதல், நினைவாற்றல் (memory), உணர்வுகள் (emotions) உந்தல்  (motivation) கற்றல் (learning), பிரக்ஞை (consciousness) ஆகியவற்றை ஒருங்கிணத்த ஒரு சொல்லே மனம். மனக்கோளாறுகளில் இவற்றில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் காணப்படும்.

          சரி, மனநலம் என்றால் என்ன? முன் கூறிய கருத்துக்கு ஏற்றபடி, மனநலம் என்பது மனக்கோளாறுகள், மனநோய்கள் இல்லாதிருப்பது மட்டுமல்ல. அதன் பொருள் அதைவிட பரந்துபட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப் படி, ஒரு தனிநபரின் மனநலம் என்பது: "தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்வியல் போராட்டங்களை தாங்கி முன்னேறுதல், திறம்பட பணி செய்தல், சமுதாயத்துக்கு தன்னாலான பங்கீட்டை சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது"

              இந்த நான்கு கூறுகளில் முதல் மூன்றும் அகம் சார்ந்தவை, மற்றது புறம் சார்ந்தது. இதன் அடிப்படையில், மனநலம் என்பது தன்னைப் பற்றி நல்லுணர்வு கொண்டிருப்பதும், தனி நபராகவும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் முறையாகச் செயல்படுவதுமே என்று அறியப்படுகிறது. இக்கருத்தையே பகுத்தாராய்வின் தந்தை என்று அழைக்கப்படும் சிக்மண்ட் ஃபுராய்ட், "மனித வாழ்க்கையின் நோக்கம் அன்பு செலுத்துவதும் பணி செய்வதும்" என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறினார். சமுதாயத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அதன் மக்களின் மனநலம் முக்கியம். இது ஒரு சமுதாய மூலதனமாகக் கருதப்படுகிறது


               அடுத்து, மனநலத்தை எப்படி அளவிடுவது என்ற ஒரு கேள்வி எழுகிறது. மனநலத்தை ஊன்றி ஆராய வேண்டுமானால்  அதை அளவிடுவது முக்கியம். மனநலம் என்பது அகவயமானது. அதை ஒருவர் சொல்லியே தெரிந்து கொள்ள வேண்டும். இதை அளவிடுவதற்கு பல வினாப் பட்டியல்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று டெனனட்டும் சக ஆய்வாளர்களும் உருவாக்கியுள்ள வாரிக்-எடின்பரோ மனநல அளவுகோல் [1]. இது பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டு ஒரு சிறந்த அளவுகோலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாரிக்-எடின்பரோ மன ஆரோக்கிய அளவுகோல் 
            அடிப்படையில் இது 14 கேள்விகளைக் கொண்ட ஒரு வினா வரிசை. இதை ஒருவர் சுயமாக பூர்த்தி செய்ய வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக  உங்களுக்கு இருந்த மனநிலையை மனதில் கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் 1-ல் இருந்து 5 என்ற அளவு படி மிகப் பொருத்தமான ஓர் எண்ணைக் குறிக்க வேண்டும் [இல்லவே இல்லை =1; அபூர்வமாக =2; சில சமயங்களில் மட்டும் =3; அடிக்கடி =4; எப்போதும் =5]. பின், எல்லா புள்ளிகளையும் கூட்டி மொத்த புள்ளிகளை கணக்கிட வேண்டும். சரி, துணிந்து உங்கள் மனநலதைப் பரிசோதித்துப் பாருங்கள்!


1. எனது எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கிறேன்.

2. என்னால் எனக்கும் மற்றவ்ர்களுக்கும் பயன் உண்டு என்ற உணர்வு எனக்கு இருக்கிறது.

3. நான் மனப்பதற்றமின்றி இருக்கிறேன்

4. என்னால் மற்றவர்கள் மீது அன்பும் கரிசனமும் காட்ட முடிகிறது.

5. நான் உடலிலும் உள்ளத்திலும் சக்தியோடு சுறுறுப்போடு இருக்கிறேன்.

6. ஏதாவதுபிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை நல்ல முறையில் கையாள்கிறேன்
8. எனது சிந்தனை தெளிவாக இருக்கிறது
9. என்னைப் பற்றி எனக்கு சுய நல்லுணர்வு உண்டு.
10. மற்றவர்களிடம் நெருக்கமும் ஒட்டுறவும் இருக்கிறது.
11. என்னால் சுயமாக முடிவுகள் எடுக்க முடிகிறது.
12. மற்றவர்கள் என் மேல் அன்பு காட்டுகிறார்கள் என்ற உணர்வு இருக்கிறது .
13. எனக்கு புதிய விஷயங்களில் நாட்டம் இருக்கிறது.
14. நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

இதன்படி, பெரும்பான்மையானவர்கள் 41 – 59 புள்ளிகள் பெறுவார்கள் (இயல்பு நிலை).
59 - 70 புள்ளிகள்:  நல்ல செய்தி. உங்கள் மனநலம் சராசரியை விட கூடுதலாக உள்ளது. மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.
40 -59 புள்ளிகள்: உங்கள் மனநலம் சராசரி நிலையில் உள்ளது. மனநலத்தைப் பேண மேலும் நடவடிக்கை எடுக்கலாம்.
32 – 40 புள்ளிகள்: உங்கள் மனநலம் சராசரியை விட குறைவாக உள்ளது. மனநலத்தை மேம்படுத்த நடவடிக்கள் உடன் மேற்கொள்ளப் பட வேண்டும்.
0- 32 புள்ளிகள்: உங்கள் மனநலம் கவலை தருவதாக உள்ளது. உடன் நடவடிக்கை எடுக்கவும்



           மேலே உள்ள அளவுகோல் மனநலம் பற்றியது, மனக்கோளாறு பற்றியது அல்ல என்பதைக் கவனிக்கவும். குறைவான புள்ளிகள் பெற்றால் அது மனக்கோளாறைக் குறிக்காது, ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்று பொருள்படும். மனக்கோளாறு பற்றிய விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில்  பார்க்கலாம்



[1] Tennant, R., Hiller, L., Fischwick, R. et al, The Warwick - Edinburgh Mental Well-being Scale (WEMWBS): Development and U.K. validation, Health and Quality of Life, 2007, 5:63. doi 101186/1477-7252 -5-63.