Tuesday, January 3, 2017

ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை



இயல் 10: சில அடிப்படை தகவல்கள் 

 
முந்திய இயல்களில் ஆட்டிசத்தின் அறிகுறிகளையும் குணாம்சங்களையும் ஓரளவு விரிவாகப் பார்த்தோம். அடுத்து ஆட்டிசம் பற்றி சில அடிப்படைத் தகவல்களைக் காண்போம். ஆட்டிசத்தை முதன்முதல் அறிவியல்பூர்வமாக விவரித்தவர் லியோ கென்னர் (Leo Kanner) என்ற அமெரிக்க குழந்தை மனநல மருத்துவரே. 1943 ம் ஆண்டு அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தான் பார்த்த 11 குழந்தைகளைகளுக்கு சில ஒற்றுமைகள் இருந்தைதைக் கண்டு அவர்களைப் பின்வருமாறு வர்ணித்தார்1:


இந்த குறைபாட்டின் முதன்மையான அம்சம் இந்த குழந்தைகளால் மற்றவர்களுடன் சாதாரண முறையில் உறவு கொள்ள இயலாமல் இருப்பதும் தனித்து இருப்பதுமே..... அவர்களின் பெற்றோர்களை அவர்கள் 'ஓடுக்குள் வாழுகிறார்கள்' என்றும் "அவர்களைத் தனியே விட்டும்போதான் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்... மற்றவர்கள் பற்றிய பிரக்ஞை வளர்ச்சி குறைவாவே ஊள்ளது' என்றும் கூறுகிறார்கள்".


மனதளவில் அவர்கள் ஓர் ஓடுக்குள் அல்லது கூட்டுக்குள் இருப்பது போன்ற இந்த குணாம்சமே இவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை வலியுறுத்த இந்த குறைபாட்டுக்கு ஆட்டிசம் என்று பெயரிட்டார். ஆட்டிசம் என்ற பெயர் auto என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதாவது தானாக இயங்கும் தன்மையை குறிக்கும். இவர்கள் மற்ற்வர்களுடன் தொடர்பு கொள்ளாலம் தனியே இருப்பதை இது விலியுத்துகிறது.


லியோ கென்ன்னர் கட்டுரையை எழுதி ஒரு வருடத்துக்குப் பின், அதாவது 1944-ல், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஹான்ஸ் அஸ்பர்ஜர் (Hans Asperger) என்ற குழந்தைநல மருத்துவர் இது போன்ற, ஆனால் ஓரளவு வேறுட்ட, குணம்சங்களைக் கொண்ட சில சிறார்களை ஆய்வு செய்து எழுதினார். இவர்களை கீழ்கண்டவாறு விவரித்தார்2:


இவர்கள் அறிவுத்திறன் சராசரி அளவில் உள்ளது....... இவர்களின் முக்கிய குனாம்சங்களாக ஒத்துணர்வு அற்றமை, நட்புறவுகளை உண்டாக்கிக் கொள்ள இயலாமை, ஒரு தலைப்பட்ட உரையாடல், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் இவர்களுக்கு இருக்கும் அதி மும்முரமான ஆர்வம் ஆகியவற்றைக் கூறலாம்"


இந்த நிலையை அட்டிசம் சார்புள்ள ஆளுமைப்பிறழ்வு (autistic psychopathy) என்று அவர் பெயரிட்டார்.ஆட்டிசம் பற்றிய ஆராய்ச்சியில் அடுத்த மைல் கல்லாக விளங்குவது இங்கிலாந்தைச் சேர்ந்த லோனா விங் (Lorna Wing) என்ற குழந்தை மனநல மருத்துவர் 1979 -ல் செய்த ஓர் ஆய்வே3 . வரையறுக்கப்பட்ட ஒரு வட்டாரத்தில் உள்ள எல்லா சிறார்களையும் ஆராய்ந்த இவர் ஆட்டிசத்தின் தன்மையும் அதன் பாதிப்பும் இக்குழந்தைகளிடையே வெகுவாக வேற்றுபட்டுக் காணப்படுவதை உணர்ந்தார். சிலருக்கு கென்னர் கூறிய ஆட்டிசமும் வேறு சிலருக்கு அஸ்பர்ஜர் விவரித்த குணாம்சங்களும் கொண்ட ஆட்டிசமும், வேறு சிலருக்கு இவ்விரண்டுக்கும் இடைப்பட்டை ஒரு ஆட்டிச நிலையும் காணப்படுகிது என்பதை ஐயமற நிறுவினார். இந்த கண்டுபிடிப்பில் இருந்து பெறப்பட்டதுதான் ஆட்டிச நிறமாலை (autistic spectrum) என்ற கோட்பாடு (பார்க்க இயல் 2 ). ஆட்டிசத்தில் காணப்படும் பலவிதமான குறைபாடுகளை முப்பெருங் குறைகளாக வகுத்தவரும் இவரே.


இதுவரை மருத்துவர்களுக்கு பெரும் புதிராக இருந்துவந்த ஆட்டிசத்தை புரிந்துகொள்ள இந்த அணுகுமறை பெரும் துணையாக இருந்தது. நடைமுறைக்கு ஒத்ததாகவும் இருந்துவருகிறது. அண்மைக்கால வகைப்பாடுகளில் லோனா விங் கூறிய முப் பெருங்குறைகள் இரண்டு தலைப்புகளின் கீழ் விவரிக்கப்பட்டாலும்4 ஆட்டிசத்தின் பன்முகத் தன்மையை புரிந்துகொள்ள விங் கூறிய முப்பெரும் குறைகள் என்ற கருத்து நடைமுறைக்கு பயனுள்ளதாக இருந்துவருகிறது.
 
ஆட்டிசத்துக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர் என்ன? சிலர் இதை மதி இறுக்கம், மன இறுக்கம், தற்புனைவு ஆழ்வு என மொழியாகக்கம் செய்து எழுதுகிறார்கள். ஆனாலும் இப்போது ஆட்டிசம் என்ற சொல் வழக்கத்துக்கு வந்துவிட்டது. எளிமை கருதியும் பயன்பாடு கருதியும் ஆட்டிசம் என்ற சொல்லே இந்த பதிவுகளில் பாவிக்கப்படுகிறது.

 

ஆட்டிசம் ஏற்படக் காரணம் என்ன

 

ஆட்டிசம் ஒரு நரம்பு மண்டலக் கோளாறு; இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் மூளை சாந்த குறைபாடு. அது ஒரு மனநோய் அல்ல. முன்னர் நம்பப்பட்டது போல பெற்றோர்களின் புறக்கணிப்பால் ஆட்டிசம் ஏற்படுவது இல்லை. சில உணவுகளினால் அல்லது ஒவ்வாமையினால் ஆட்டிசம் ஏற்படுகிறது என்பதிலும் ஆட்டிசம் உருவாகிறது என்பதிலும் எந்த உண்மையும் இல்லை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளால் ஆட்டிசம் ஏற்படலாம் என்று அண்மையில் ஒரு வதந்தி நிலவியது. அது தவறானது என்பது இப்போது உறுதிப்படப்பட்டுள்ளது.


 இரண்டு வகையான ஆட்டிசங்கள் : முதல் நிலை ஆட்டிசமும் இரண்டாம் நிலை ஆட்டிசமும் 

 

ஆட்டிசம் உள்ளவர்களில் ஏறத்தாழ 10% விகிதத்தினருக்கு மட்டுமே மூளைசார்ந்த ஒரு காரணத்தால் ஆட்டிசம் ஏற்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, 90% விகிதத்தினருக்கு ஏன் ஆட்டிசம் ஏற்படுகிறது என்று இதுவரை அறியப்படாமலே இருந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிகப்பெரும்பாலானோருக்கு ஆட்டிசம் ஏற்படக் காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இதன் அடிப்படையில் ஆட்டிசத்தில் இரண்டு வகைகளாகப் வகுக்கலாம். ஒன்று, காரணம் அறிய முடியாத, 90% விகிதத்தினருக்கு உள்ள, ஆட்டிசம். இது முதன்மை ஆட்டிசம் (primary autism, ideopathic autism) என்று அழைக்கப்படுகிறது. மற்றது. ஏதோ ஒரு மூளை சார்ந்த காரணத்தால், 10% விகிதத்தினருக்கு ஏற்படும் ஆட்டிசம். இது இரண்டாம் நிலை ஆட்டிசம் (secondary autism, complex autism) அறியப்படுகிறது. இந்த இரண்டாம் நிலை ஆட்டிசத்தில் வேறு மூளை சார்ந்த நோய்க்குறிகளும் காணப்படும். இந்த பட்டியலில் ஐம்துக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளன. இந்த வித்தியாசம் முக்கியமானது. இதை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.

எட்டு வயதான கிஷோரை சிறப்புப் பள்ளையில் சேர்த்தபோது அவனுக்கு ஆட்டிசம் உள்ளதாக அவன் பெற்றோர்கள் கூறினார்கள். ஆட்டிசத்தின் பல அறிகுறிகள் ஆவனுக்கு இருந்து உண்மையே. ஆனால் நாளடைவில் அவன் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகக் குறைவாகவே இருந்தது. அவன் மற்ற ஆட்டிசம் உள்ள குழந்தைகளை விட மிகப் பின்தங்கி இருந்தான். ஆசிரியர்களுக்கு இரு வியப்பாக இருந்தது. மேலும் விசாரித்துப் பார்த்ததில் அவன் பிறந்த போது மூளைக்குள் குருதிக் கசிவு (cerebral haemorrhage) ஏற்பட்டதாகவும் ஒரு சிறப்பு நரம்பியல் மருத்துவர் அவனை நெடுங்காலமாகப் பார்த்து வருகிறார் என்றும் தெரிய வந்தது. அவனுக்கு ஒரு பக்க கையும் காலும் ஓரளவு தளர்ந்து இருந்தது. ஆரம்பத்தில் வலிப்புநோய் இருந்ததாகவும் தெரிய வந்தது. ஆனால் அவனுக்கு இருந்தது ஆட்டிசம் மட்டுமே என்பதில் பெற்றோர்கள் விடாப்பிடியாக இருந்தார்கள். அவன் மற்றகுழந்தைகள் போல முன்னேற்றம் அடையத் தவறியமைக்கு பள்ளிக்கூடத்தை குறை கூறினார்கள்.

எனவே, முதன்மை ஆட்டிசத்துக்கும் இரண்டாம் நிலை ஆட்டிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வது முக்கியம். இதை உயர் குருதி அழுத்தத்தோடு ஒப்பிடலாம். பலருக்கு எந்த நேரடிக் காரணமும் இன்றி உயர் குருதி அழுத்தம் ஏற்படுகிறது. இது முதல்நிலை உயர் குருதி அழுத்தம். ஒரு சிலருக்கு சிறுநீரக நோயால் அல்லது வேறு ஒரு உடல்னோயினால் உயர் குருதி அழுத்தம் உண்டாகிறது. இது இரண்டாம் நிலை உயர் குருதி அழுத்தம். ஆட்டிசமும் வேறு சில வளர்ச்சிக் குறைபாடுகளும் இம்மாதிரியானவையே



முதலாம் நிலை ஆட்டிசம் சில குடும்பங்களிடையே கூடுதலாகக் காணப்டுகிறது. மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால் அதன் உடன் பிறந்தவர்களுக்கு ஆட்டிச நிறமாலை உள்ள வாய்ப்பு 15 – 25 சதவிகிதம் என்று கணக்கிடப்படுகிறது5 இப்போது ஆட்டிசத்துக்கு சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. ர்ப்பத்தின் போது மூளை வளர்ச்சியில் ஏற்படும் நுட்பமான மாறுதல்களால் மூளையின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுற்றுச்சூழலும் காரணமாக இருக்கலாம். ஆனால் தற்சமயம் எதையும் குறிப்பிட்டு உறுதிபடக் கூற முடியாமல் உள்ளது.

 

 'பெருகிவரும்' ஆட்டிசம்



முன்பெல்லாம் ஆட்டிசம் மிக என்ற குறைபாடு குழந்தைகளில் மிக அரிதாகாவே காணப்படுகிறது என்ற கருத்து நிலவி வந்தது. ஆட்டிசம் உள்ள ஒரு குழந்தைகளை குழந்தைநல மருத்துவர்கள கூட அபூர்வமாகத்தான் அடையாளம் கண்டார்கள். இந்தக் குழந்தைகள் மருத்துவ மருத்துவக் கூடங்களில் ஒரு ஆய்வுப்பொருள்போல் மருத்துவ மாணவர்களுக்கு காட்டப்பட்டார்கள். 1970களில் 2 000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் (1: 2,000) இந்த குறைபாடு ஏற்படுகிறது என்று நம்பப்பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளில் 1:1 000, 1:250, 1:150 என இது படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கால ஆராய்ச்சிகள் ஆட்டிச கூட்டுஅறிகுறி என்ற கோளாறு 68 குழந்தைகளுக்கு ஒன்றுக்கு என்ற விகிதத்தில் (1:68)காணப்படுகிற்து என்று எடுத்துக் காட்டுகின்றன6 . ஏன் இந்த மிகப்பெரும் வேறுபாடு?


இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அண்மைக் காலமாக ஆட்டிசம் வரையறுக்கப்படும் விதத்தில் பெரும் மாற்றம் ஏற்படிருப்பது ஒரு முக்கிய காரணம். முன்பெல்லாம் கடுமையான ஆட்டிசம் மட்டுமே அடையாளம் காணப்பட்டது. இப்போது மிதமான ஆட்டிசமும் அஸ்பர்ஜர் சின்றோமும் அதிக அளவில் இனம் காணப்படுகின்றன. அதோடு, மருத்துவர்களிடையே ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணம். ஆட்டிசம் கூடிகொண்டு வருவதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்
 
எல்லா நாடுகளைலும் மக்கட் தொகையில் ஆட்டிசம் ஒரே அளவில் காணப்படுகிறது என்று அனைத்துலக ஆராய்ச்சிகள்கூறுகின்றன. நம் நாடுகளில் எந்த அளவுவில் ஆட்டிசம் காணப்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் இதுவரை செய்யப்படலில்லை. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு ஏறத்தாள 1% குழந்தைகளுக்கு ஆட்டிசம் உள்ளதாக அறிவித்தது7 . குழந்தைநல மருத்துவர்களும் ஆசிரியர்களும் முன்னை விட அதிக அளவில் குழந்தைகளிடையே ஆட்டிசம் இப்போது காணப்படுவதாகக் கூறுகிறார்கள். தோராயமாக, 100ல் ஒரு குழந்தக்கு ஆட்டிசம் கூட்டுஅறிகுறி உள்ளது (1:100) என்று கூறலாம்.


ஆண் - பெண் வித்தியாசம்

 

ஆட்டிசம் பெரும்பாலும் ஆண்களிலேயே காணப்படுகிறது. ஆட்டிசம் உள்ள நூறு பேரில் 80 பேர் ஆண்ளாக இருப்பர். அதாவது ஆண் பெண் விகிதம் 4:1 ஆகும்.

 

ஆட்டிசத்தின் எந்த வயதில் ஆரம்பக்கிறது

 

பொதுப்படையாகக் கூறுவதானால் ஆட்டிசத்தின் அறிகுறிகள் 3 வயதுக்கு முன்னரே தெரியவருகின்றன. என்வே, முதல் 18 மாதங்களிலேயே ஆட்டிசத்தை அடையாளம் காண இயலும். னால் பெரும்பான்மையானவர்கள் பல ஆண்டுகள் ஆகியும் இனம் காணப்படுவது இல்லை. குறிப்பாக, சுமாரான ஆட்டிசம் உள்ளவர்கள் (அஸ்பர்ஜர் சின்றோம்) பதின்ம வயதுவரை அடையாளம் காணப்படுவது இல்லை. இது வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள நிலைமை என்றால் நமது நாடுகளில் உள்ள நிலைமை பற்றிக் கூறத் தேவை இல்லை.

ஆட்டிசப் பண்புகள் உள்ள 'சாதாரணர்கள்'!



ஆட்டிசம் சார்ந்த சில பண்புக் கூறுகள் சாதாரண குழந்தைகளிடம், ஏன் வயதுவந்தவர்களிடமும், காணப்படுகின்றன. தனிமையை விரும்பும் போக்கு, மாற்றிக்கொள்ள முடியாத, நெகிழ்சியற்ற பழக்க வழக்கங்கள், பிறர் மனதை புரிந்துகொள்ள முடியாத போக்கு போன்ற பண்புகள் மக்கட் தொகையில் பலரிடம், குறிப்பாக ஆண்களிடம், காணப்படுவதுண்டு. ஆனால் இவை அவர்கள அன்றாட வாழ்க்கையை அவ்வளவாகப் பாதிப்பது இல்லை. பின்வரும் உதாரணங்களைப் பாருங்கள்
 
ஒரு 15 வயதுப் பையன் மற்றவர்களுடன் கூடிப் பழகுவது இல்லை, நெருங்கிய நண்பன் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை, குடும்பத்தினருக்கு உள்ள மன உழைச்சல்களைப் புரிந்துகொள்வது இல்லை என்ற காரணங்களுக்காக மருத்துவர் ஒருவரை பார்க்க அவன் பெற்றோர்கள் ஆழைத்து வந்தார்கள். இதை தீர ஆராய்ந்து பார்த்தில் அவனுக்கு சுமாரான ஆட்டிசம் இருந்ததை அடையாளம் காண முடிந்தது. பல மாதங்களுக்குப் பின் அவனின் தாயார் மருத்துவரைப் பார்த்து எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டார். “என் கணவரும் இப்படித்தான். அவருக்கும் நண்பர்கள் இல்லை. என் மனதையும் புரிந்துகொள்வது இல்லை. அவருக்கும் ஆட்டிசம் இருக்கக் கூடுமா?” அவர் கனவர் ஒரு பேராசிரியர், அவரது துறையில் பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவருக்கிப் பல ஆட்டிச கூறுகள் இருந்தன. ஆனால் அவரை அவ்வலவாகப் பாதிக்கவில்லை
 
இம்மாதிரியாக, சில ஆட்டிப் பண்புகள் பலரிடையே, குறிப்பாக ஆண்களில், காணப்படுவது உண்டு. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஆட்டிசத்தை உண்டு - இல்லை என்று இருமையில் பார்க்கக் கூடாது. சாதாரண மக்களிலும் காணப்படும் சில பண்புகளின் நீட்சியாகவே ஆட்டிச கூட்டு அறிகுறியின் பார்க்க வேண்டும். ஆராய்ச்சிகள் சாதாரண மக்களிடையே 1% விகித்தில் ஆட்டிசப் பண்புகள் காணப்படுகின்றது என்று கூறுகின்றன8.



"என் மகனுக்கு ஆட்டிசம் உள்ளது அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்?”



இது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. அதாவது, ஆட்டிசம் உள்ள ஒருவருக்கு வயது போக்கப் போக அதன் தாக்கம் குறைகிறதா? அதேபோல இருக்கிறதா? அல்லது நாளடைவில் கூடுகிறதா? இதற்கு நேரடியாக பதில் கூறுவதானால் ஆட்டிசம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு குறைபாடு என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் கடினம். அது ஆட்டிசத்தின் தன்மையைப் பொருத்து என்பதே மிகச் சுருக்கமான பதில். பொதுவாகக் கூறுவதனால், முன்பள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உள்ள சிறு குழந்தைகள் வளர்ந்து பதின்ம வயதுக்குப் பின்னும் ஆட்டிசம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்8.


கடும் ஆட்டிசம் (கென்னர் ஆட்டிசம்) உள்ளவர்களில் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இவர்கள் அறிதிறன் வளர்ச்சி குன்றியவர்கள் என்பதையும் கவனிக்கவும். இவர்களில் பெரும்பாலானோர் தற்சார்பு இல்லாதவர்களாக, சுயமாக வாழ இயலாமல் மற்றவர்களின் ஆதரவை நம்பி வாழ வேண்டிய நிலையிலேயே இருப்பார்கள். சுமாரான ஆட்டிசம் உள்ளவர்களில் பெரும்பாலானோரிடையே பிற்காலத்தில் பெருமளவு முன்னேற்றம் காணப்படும், ஆட்டிசத்தின் எச்சங்கள்சில காணப்பட்டாலும் பெருமளவு தேறி இருப்பார்கள். இவர்களால் பிறர் உதவியின்றி வாழவும், பணி செய்யவும், குடும்பம் நடத்துவதும் முடியும். மிதமான அட்டிசம் உள்ளவர்களிலும் கணிசமான முன்னெற்றம் காணப்படும். ஆனால் ஆட்டிசத்தின் அறிகுறிகள் பல வாழ்நாழ் முழுவதும் தொடந்து காணப்படும், சிலரால் மட்டுமே பணிபுறிய முடியும்.


ஆட்டிசம் உள்ள ஒரு குழந்தையின் வருங்காலத்தை இரண்டு காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் முடிவாக உள்ளது. இதில் ஒன்று அறிவுத் திறன் (அறிவாற்றல்). அறிவாற்றல் குறைவாக உள்ளவர்களில், அதாவது IQ எனப்படும் நுண்ணறிவு ஈவு 70க்குக் குறைவாக உள்ளவர்களில், முன்னேற்றம் குறைவாகவே இருக்கும். இரண்டாவது, ஆட்டிசம் உள்ளகுழந்தையின் மொழி வளர்ச்சி. பின்தங்கிய மொழி வளர்ச்சி உள்ள குழந்தைகளில் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும் 9, 10.

                                              (அடுத்த இயல் சிறு இடைவெளிக்குப் பின்)


சான்றாதாரங்கள்


1 Kanner L. (1943). Autistic disturbances of affective contact. Nervous Child 2, 217-250

2 Frith, U. (1991). Asperger and his syndrome. In U. Frith (Ed.), Autism and Asperger Syndrome. (pp. 1-36). Cambridge: Cambridge University Press. (Translation of Asperger's original 1944 article).

3 Wing. L. (2001). The Autistic Spectrum: A parents guide to understanding and helping your child, Berkeley, CA: Ulysses Press.

4 American Psychiatric Association (2013). Diagnostic and statistical manual of mental disorders. 5th ed. Arlington, VA: American Psychiatric Association.
5 Folstein S. & Rutter M. (1977 ) Infantile autism: a genetic study of 21 twin pairs. Journal of child psychology and psychiatry, and allied disciplines, 18(4):297–321.

6 Centres for Disease Control and prevention, Autism Spectrum Disorder: Data and statistics.
https://www.cdc.gov/ncbddd/autism/data.html [பார்த்த நாள் 02.01.2017].

7 Silberberg.D, Arora N, Bhutani V et al (2013). Neuro-Developmental Disorders in India – An INCLEN Study, Neurology, 80, 7 Supplement P04.229.

8 Constantino. J.N. & Todd R.D. (2003). Autistic Traits in the General Population A Twin Study, Archives of General Psychiatry, 60:524-530

9 McGovern, C.W. & Sigman, M. (2005). Continuity and change from early childhood to adolescence in autism. Journal of Child Psychology and Psychiatry, 46, 401–408.

10 Gillberg. C. & Steffenburg. S. ( 1987) Outcome and prognostic factors in infantile autism and similar conditions: A population-based study of 46 cases followed through puberty. Journal of Autism and Developmental Disorders, 17, 2, 273–287.