Friday, February 20, 2015

மனநலம் பற்றி நான் எழுதியுள்ள ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. புத்தகத்தைப் பற்றிய சில விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.








மனநோய்களும் மனக்கோளாறுகளும்

டாக்டர் எம். எஸ். தம்பிராஜா


காலச்சுவடு பதிப்பகம் 2014
ISBN 978-93-84641-00-9
பக். 325
விலை ரூ. 290.


முன்னுரையிலிருந்து:

மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எமது மக்கள் - படித்தவர்கள் உட்பட - குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், மனக்கோளாறுகள் பற்றி பல மாயைகளும் மக்களிடையே நிலவுகின்றன. சில மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கூட பல தப்பபிப்பிராயங்களும் தவறான கருத்துகளும் உள்ளன.

இந்த மாயைகளை களையவும், மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்டதே இந்த நூல்.

நமது சமுதாய பண்பாட்டுச் சூழலில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும், பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியமாகவும் இருந்து வருகிறது. 'பைத்தியம்', 'சித்த சுவாதீனமற்றவன்', 'கிறுக்கு' என்றும், நவீன தமிழில் 'லூசு', 'மெண்டல்' என்றும் பல பட்டங்கள் கட்டி சொற்களால் இவர்களைப் பார்த்து கல் எறிகிறோம். தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக, 'மன நோயாளர்' என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமும், வெறுப்பும், குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய 'காப்பகங்கள்' அவர்களை கேவலமாக நடத்துகிறன. அவர்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள், வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயமும் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டத்திலும் காணப்படுகின்றன.

மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல்பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இந்த நூலின் பிரதான நோக்கம். படித்தவர்கள் பலர் மனக்கோறுகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. மனமும் மனக்கோறுகளும் சிக்கலானவை; உடலையும் உடல் சார்ந்த நோய்களை விட பல மடங்கு குழப்பமானவை. இந்த நூலில் தேர்ந்தெடுத்த சில மனக்கோறுகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. இவை யாவும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களையும் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்டவை (முதன்மை சுகாதாரப் பணியாளர்கள் / ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என்ற வரையறைக்குள் பொது மருத்துவர்களும் அடங்குவர்).......

இயல்களில் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகள் கூறி இருந்தாலும் இது உபதேசம் செய்யும் நூல் செய்யும் நூல் அல்ல; தன்னுதவி நூலுமல்ல. மாறாக, மனநலம் குறித்து தகவல்களை பாரபட்சமற்ற முறையில் மக்கள் முன் வைப்பதே இதன் குறிக்கோள். …....

பொது மக்களிடையே உளவியற் சொற்களும் மனநல மருத்துவம் சார்ந்த வார்தைகளும் பொது வழக்கில் அன்றாட பவனைக்கு வர வேண்டும். ஆங்கிலத்தில் சாதாரண சில சொற்கள் கலைச் சொற்களாக பொருள் மாற்றம் பெறுகின்றன. உதாரணத்துக்கு, attachment (இணைப்பு, ஒட்டுதல் என்று பொருள்) என்ற சாதாரணச் சொல் உளவியலில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான பந்தத்தை குறிக்கப் பாவிக்கப் படுகிறது. நாமும் இதை ஒட்டுதல் மொழிமாற்றம் செய்து ஒரு கலைச் சொல்லாக பாவிக்கலாம். இவ்வாறு செய்யும் போதுதான் எம்மிடையே வளமான ஒரு சொற்களஞ்சியம் உருவாகும். உருவாக வேண்டும். …...

இறுதியாக, இந்த நூலில் மனக்கோறுகள் உள்ளவர்களின் 'கதைகள்' பல கூறப்பட்டுள்ளன. கதைகள் உண்மையானவை, பெயர்களும் தனியார் விவரங்களும் அடையாளம் தெரியாதபடி மாற்றப் பட்டுள்ளன. இந்நூலில் ஆங்காங்கே சில கேள்விப் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக தன்மதிப்பீடு செய்ய உதவும் ஆரம்ப கட்ட சாதனங்கள் மட்டுமே. முழுமையான மனநல மதிப்பீடு தேவையா என்பதை கண்டுபிடிக்கத் துணை புறியலாம். அவற்றை கவனத்துடன் பாவிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இங்கு தரப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

டாக்டர் எம்எஸ்தம்பிராஜா
பர்மிங்ஹம், இங்கிலாந்து 
சிறப்பு மனநல மருத்துவர்


இயல்கள்

முன்னுரை

இயல் 1. மனநலம் என்றால் என்ன?

இயல் 2. மனநோய்களும் மனக்கோளாறுகளும் (Mental disorders and mental illnesses)

இயல் 3: மனச்சோர்வு (Depression)

இயல் 4. மனச்சிதைவு (Schizophrenia)

இயல் 5. இருமுனையக் கோளாறு (Bipolar Disorder)

இயல் 6. மனப்பதற்றமும் பதற்றக் கோளாறுகளும் I (Anxiety disorders)

இயல் 7. மனப்பதற்றமும் பதற்றக் கோளாறுகளும் II (Anxiety disorders)

இயல் 8. உளம்சார் உடல் நோய்க்குறிகள் (Medically unexplained symptoms)

இயல் 9 ஹிஸ்டீரியா எனப்படும் நிலைமாற்றக் கோளாறும் (convertion disorder) தன்னிலை இழத்தல் கோளாறும் (Dissociation disorder)

இயல் 10. மதுப்பழக்கம் (Alcoholism)

இயல் 11 மனத்தேய்வு (Dementia)

இயல்12. உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள் (Psychosexual disorders)

இயல் 13அறிவாற்றல் வளர்ச்சிக் கோளாறு ((Intellectual development disorder; Intellectual disability)

மேற்கோள் பட்டியல்

கலைச் சொற்கள்

பின்னிணைப்பு


நூலில் இருந்து சில பகுதிகள் …..


இயல் 3: மனச்சோர்வு

எல்லோருக்கும் அவ்வப்போது துக்கமும் துயரமும் ஏற்படுவதுண்டு. ஏன், ஒரு நாட்பொழுதில் கூட சில வேளைகளில் மகிழ்ச்சியும் மற்ற நேரங்களில் துக்கமும் மாறிமாறி ஏற்படுவது இயல்பானது. பொதுவாக எம்மை வியாபித்திருக்கும் மன உணர்நிலையை ஆங்கிலத்தில் 'மூட்' (mood) என்று அழைப்பார்கள். நாம் இதை மனநிலை என்று இப்போதைக்கு அழைப்போம். இயல்பு நிலையில், ஒரு முனையில் மகிழ்ச்சியையும் மறு முனையில் சோகத்தையையும் கொண்டதுதான் எமது மன நிலை. சோகங்கள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவை ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதொ ஒரு கட்டத்தில் ஏற்படுகின்றன. இவை, சில மணி நேரமோ, சில நாட்களோ இருந்துவிட்டு பின் விலகிப் போகும். ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படும்போது உண்டாகும் துயரமும் கூட சில மாதங்கள் நீடித்து பின் மனநிலையும் வாழ்க்கையும் இயல்பு நிலைமைக்குத் திரும்பும். இதேபோல, சில சமயங்களில், மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படுவதுண்டு.

ஆனால் சில வேளைகளில், எம்மையும் மீறி எமது மனநிலை அத்துமீறி சோர்வடைந்து போகலாம். மனநிலையில் ஏற்படும் இம்மாற்றம் வாரக் கணக்காக, மாதக்கணகாக நீடிக்கலாம். இதனால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கை, பணிபுரியும் திறன், அன்றாட செயல்பாடுகள் ஆகியவை நிலை குலையலாம். இம்மாதிரியான எல்லைமீறிய ஒரு மனநிலை பல வாரங்கள், மாதங்கள் நீடிக்கும்போதும், அதன் காரணமாக சாதாரண வாழ்வியல் கடமைகளை - குடும்ப வாழ்க்கை, அலுவலக வேலை, தினசதி வாழ்க்கை ஆகியவற்றை - நிறைவேற்ற முடியாமல்போகும்போது, அது மனச்சோர்வு (depression) என்ற மனக்கோளாறாகக் கருதப்படுகிறது. இது பெரும் மனச்சோர்வு (major depression), மருத்துவம் சார்ந்த மனச்சோர்வு (clinical depression), ஒரு முனைய மனச்சோர்வு (unipolar depression) என்றும் அழைக்கப்படுவதுண்டு. (இதேபோல, மட்டற்ற மிகை மகிழ்ச்சி நிலை ஏற்படும்போதும் பிரச்சினைகள் உண்டாகும். அது மிகை மனவெழுச்சி (mania) என்று அழைக்கப்படுகிறது. இயல் 5-ல் இதை ஆராயலாம்). மனச்சோர்வு என்ற மனக்கோளாறு குறித்து சுருக்கமாக எடுத்துக் கூறுவதே இந்த இயலின் நோக்கம்.

சகுந்தலா அன்றும் வேலைக்குப் போகவில்லை. இன்னுமொரு நாள் அலுவகத்தில் உள்ளவர்களோடு முகம் கொடுத்து பேச முடியும் என்று அவளுக்குத் தேன்றவில்லை. அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. ஆனாலும் அவளுக்கு நாள் விடியாதது போல இருந்தது. எந்த வேலையும் செய்ய மனதில் தெம்பு இல்லை. அவள் மனதை ஆழ்ந்த ஒரு கருமேகம் ஆட்கொண்டிருப்பது எவருக்கும் தெரியாது. அவலுள் இருந்த மகிழ்ச்சியை யாரோ பறித்துக் கொண்டது போன்ற உணர்வு. அவளால் சிரித்துப் பேச முடியவில்லை. மற்றவத்கள் சிரித்துப் பேசும்போது எரிச்சல் வருகிறது. முன்பொரு முறையும் இப்படி வந்தது. ஆனால் ஓரிரு வாரங்களில் சரியாகி விட்டது. இந்த முறை இரண்டு மாதமாகியும் சனியன் விட்டுப் போனதாகத் தெரியவில்லை. இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

முன்பு ஆர்வத்துடன் செய்த காரியங்களில் மனதை செலுத்த முடியவில்லை. முன் இருந்த உற்சாகம் இல்லை. முன்பெல்லாம் எவ்வளவோ வாசிப்பாள், விதம் விதமான சமயல் செய்வாள். இப்போது தன் சொந்த வேலைகளை கவனிப்பதே சிரமாக இருக்கிறது. தலை வாரத் தோன்றுவதில்லை. முகத்தைக் கண்ணாடியில் பார்க்க அவளுக்கே சகிக்கவில்லை. உடல் அசதி தாங்க முடியவில்லை. அடித்துப் போட்டது போல் கைகால் வலி பாடாயப் படுத்துகிறது.
கணவரே வீட்டு வேலையும் செய்கிறார். பிள்ளைகளையும் பள்ளிக்கு தயார்படுத்தி அனுப்புகிறார். இப்போது அவரும் பொறுமை இழந்து. “எழுந்து ஏதாவது செய்யப் பார்" என்கிறார். அவள் படும் அவஸ்தையை எவரும் அறிய மாட்டார்கள்தான் உயிரோடு இருந்து என்ன பயன்? அவள் எல்லோருக்கும் ஒரு சுமையாய் போய் விட்டாள். இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். அவளுக்கும் இந்த வேதனையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மிகுந்த பிரயாசையோடு எழுந்தாள். வெயில் தெறித்து கண்ணைத் தாக்கியது. கூடத்தைக் கடந்து சமையல் கட்டை அடைந்தாள். பின் ஏதோ நினைத்துக் கொண்டவள்போல அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதினாள். அதை கண்ணுக்குத் தெரியும் ஓரிடத்தில் வைத்தாள். அடுக்களையில் ஏதேதோ தேடினாள். எப்போதோ வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து கண்ணில் பட்டது. கண்களை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். பின், வாயில் நுரை வர, கண்செருகி தரையில் சாய்ந்தாள். அப்போது அவளுக்கு வயது 32.

தனக்கு எற்பட்டு இருப்பது ஒரு மனக்கோளாறு என்றோ, அதன் பெயர் மனச்சோர்வு என்றோ அறியாமலே சகுந்தலா போன்ற பலர் வாழ்நாள் முழுதும் துன்பப் படுகிறார்கள். சில வேளைகளில் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். நமது நாடுகளில் மனச்சோர்வு பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆனால், உலக அளவில் மனச்சோர்வு ஒரு மிக முக்கியமான மனக்கோளாறாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடாத்திய ஆய்வின்படி உலகில் 350 மிலியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. 2020-ம் ஆண்டில் உலகளவில் மனச்சோர்வு (இருதய நோய்களுக்கு அடுத்தபடியாக) இரண்டாம் இடத்தை வகுக்கும் நோயாக இருக்கும் என்பது உலக சுகாதார நிறுவத்தின் கணிப்பு [1]. சடுதியாக மாறிவரும் சமுதாய அமைப்பு, குடும்பங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அன்றாடமாய்ப் போய்விட்ட மனஅழுத்தங்கள் ஆகியவை மனச்சோர்வு கூடுதலாக ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்போதைக்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் மனச்சோர்வு மக்களிடையே அதிகளவில் காண ப்படும் ஒரு மனக்கோளாறு என்பதே.

மனச்சோர்வின் விகிதாசாரம் நாடுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நடாத்திய ஒரு பெரும் ஆய்வொன்றில் தாழ்ந்த வருமானம் அல்லது இடைப்பட்ட வருமானம் உள்ள நாடுகளில் 11.1% பேருக்கு அவர்கள் வாழ்நாளில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்றும் உயர் வருமானமுள்ள நாடுகளில் இது 14.6% விகிதம் என்றும் காணப்பட்டது. 18 நாடுகளில் 89 000 பேரை உள்ளடக்கிய இவ்வாய்வில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியும் ஒரு மையமாக பங்குபற்றியதும் குறிப்பிடத் தக்கது. இதில் இங்கு மனச்சோர்வு 9% என்று கண்டறியப்பட்டது [2]. ஒப்பீட்டுக்காக, இந்தியாவில் சர்க்கரை நோயும் ஏறத்தாழ இதே அளவில் (10%) காணப்படுகிறது. ஆனாலும் மக்களிடையே சர்க்கரை நோய் பற்றி அறிந்த அளவுக்கு மனச்சோர்வு குறித்த புரிதல் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. சராசரியாக நூற்றில் பத்துபேருக்கு அவர்கள் வாழ்நாளில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு …...

இயல் 10. மதுப்பழக்கம்

மனிதன் காலங்காலமமாக மதுபானங்களை பாவித்து வந்திருக்கிறான். எல்லா சமுதாயங்களிலும், எல்லாக் காலங்களிலும் மக்கள் மதுவை உபயோகித்து வந்திருக்கிறார்கள். நமது நாட்டில் மது பாவனை பற்றிய கண்ணோட்டத்தில் பல முரண்பாடுகளைக் காணலாம். ஒரு முனையில் குடி பஞ்சமாபாத்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மது ஓர் அரக்கன் என்றும் பூரண மது ஒழிப்பே மதுசார்ந்த சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. மறு முனையில் அரசாங்கத்துக்கும் தரகர்களுக்கும் கிடைக்கும் வருவாயை முன்வைத்து மதுவின் விற்பனை தீவிரப் படுத்தப்படுகிறது. அரசுக்கும், அரசியலுக்கும், பொருளாதாரத்துக்கும் மது உற்பத்தியும் நுகர்வும் தவிர்க்க முடியாத ஒரு தேவையாகியள்ளது....... ஆனால், இரட்டைத் தராதரத்தின் வெளிப்பாடாக, ஒளிவு மறைவாக குடிப்பதும் குடிப்பதை குடும்ப ரகசியமாக வைத்திருப்பதும் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு பண்பு. மதுவருந்தல் பற்றி சமூகத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் திறந்த மந்தோடு தீவிர விவாதங்கள் நடைபெறவில்லை. வெறும் கோஷங்கள் மட்டுமே நாணயமற்ற முறையில் முன்வைக்கப் படுகின்றன.

குடிப்பழக்கம் வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுகிறது. ஓர் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடாக, சமுதாயப் பிரச்சினையாக என பலவகை அணுகுமுறைகளுக்கூடாகப் பார்க்கப் பட்டு வருகிறது. மதுவருந்துவதை கருப்பு வெள்ளை என்ற இருமையில் பார்க்காமல், மதுவைப் பற்றியும் குடிப் பக்கத்தைப் பற்றியும் அறிவு பூர்வமாகவும் அறிவியல் நோக்கிலும் அணுகுவது அவசியம். இந்த இயல், மதுவருந்துவதையம் அதன் மனநலத் தாக்கங்களையும் சமூக பண்பாட்டு மதிப்புகளுடன் தொடர்பு படுத்தாமல் அறிவியல் துணைகொண்டு ஆய்வுக்குட்படுத்துகிறது. …...................................
தவறான மது பாவனையைக் கண்டறிதல்




ஒருவர் மது அருந்துவராக இருந்தால், அப்பழக்கம் ஏதேனும் தீங்கு விளைவிக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் பாரபட்சமற்ற மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வது அவசியம். இதை தானாகவோ அல்லது ஒரு ஆரம்ப சுகாதார பணியாளரோ மேற்கொள்ளலாம். கீழே தரப்பட்டுள்ள ஏழு வினாக்களுக்களுக்கும் இதய சுத்தியுடன் பதிலளித்துப் பாருங்கள்:

  1. நீங்கள் வாரத்துக்கு எத்தனை அலகு (கீழே பார்க்க) மது அருந்துகிறீர்கள்?
  2. அது உங்கள் உடல் நலத்தை, மன நலத்தை எந்த அளவு பாதிக்கிறது?
  3. அது உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?
  4. அது உங்கள் நிதி நிலமையை எவ்வாறு பாதிக்கிறது?
  5. நீங்கள் செய்யும் பணியை/வேலையை பாதிக்கிறதா?
  6. மதுவினால் உங்கள் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா (-ம். வன்முறைகள், குணமாற்றம்)?
  7. மது சார்பு நிலையின் அறிகுறிகள் ஏதாவது காணப்படுகின்றனவா?
...........

தொகுத்துச் சொல்வதானால்:

  • மது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களில் மிக முக்கியமானது அதை மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டும் என மனதில் உண்டாகும் வேட்கையே.

  • மது பாவனையால் ஏற்படும் உடல் மற்றும் உள விளைவுகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவை, கெடுதி விளைவிக்காத மது பாவனை, இடர் விளைவிக்கக் கூடிய பாவனை, கேடு விளைவிக்கும் பாவனை, மது சார்பு நிலை என்பன.
  • 20% இந்தியர்கள் மட்டுமே மது அருந்துகிறார்கள். ஆனால், இந்தியர்கள் வடி சாராயம் போன்ற கூடுதலாக அல்கஹால் உள்ள மதுவை அதிகமாக அருந்துகிறார்கள். இதனால் இதில் 20% பேருக்கு மது சார்பு நிலை ஏற்படுகிறது.

  • மது அருந்தும் ஒருவர் தான் ஒரு வாரத்தில் எத்தனை அலகு அல்காஹால் உட்கொள் கிறோம் என்பதை கணக்கிட்டு அறிந்து கொள்வது முக்கியம்.

  • சராரியாக, மது அருந்தும் வரம்பு ஒரு வாரத்துக்கு 8 அலகுகள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீறினால் உடல் உள கேடுகள் ஏற்பட இடமுண்டு.

  • மது சார்பு நிலையில் மது அருந்தியே ஆகவேண்டும் என்ற தீவிர வேட்கையும், குடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படும். மதுவை நிறுதினால் நிறுத்தப் பின் விளைவுகள் உண்டாகும்.

  • மது பாவனையையும் அதன் தாக்கத்தையும் கண்டறிய AUDIT மற்றும் CAGE கேள்விப் பட்டியல்கள் முதன்மை சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் உதவி பயனுள்ளவை.
  • சில எளிய சுய உதவி மற்றும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களின் குறுக்கீடு முறைகளால் அளவோடு மது அருந்த அல்லது முற்றாக நிறுத்த உதவிபுரிய முடியும்.

  • மது சார்பு நிலை உள்ளவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். அதன் பின் இவர்கள் மதுவை முற்றாக நிறுத்த வேண்டும். மீண்டும் குடிப்பதை தடுக்க, இதன் பின் குழுவழிச் சிகிச்சை தேவைப்படும்.

பின் அட்டையிலிருந்து:

மக்கள் மத்தியில் மனநோய்கள் பற்றியும் மனக்கோளாறுகளும் குறித்தும் பொதுவாகவே பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் ஊள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி - மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம் வரை, அல்சைமர் மறதிநோய் முதல் உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள் வரை - இந்நூல் விளக்குகிறது. சாதாரண வாசகனுக்கும், மருத்துவர்கள் உள்ளிட்ட முதல்நிலை சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் எளிய தமிழில் எழுத்தப்பட்ட இந்நூல் மனக்கோளாறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வினாப்பட்டியல்களையும் தன்னுதவிக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது தனிச் சிறப்பு. ஒவ்வொரு இயலும் ஆராய்ச்சிச் சான்றுகள் மேற்கோள் காட்டப்டுள்ளன. இந்நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.