Friday, December 30, 2016


ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை 

இயல் 8. மழையும் புயலும்: ஆட்டிசத்துடன் இணைந்துவரும் குறைபாடுகள்

கெடுவாய்ப்பாக, ஆட்டிசம் தனித்து வருவது இல்லை. அதாவது ஆட்டிசம் உள்ள குழந்தைகளிடையே வேறு சில குறைபாடுகளும் கோளாறுகளும் காணப்படும். வளமான நிலத்தில் பயிரோடு சேர்ந்து களைகளும் வளருவது போல ஆட்டிசத்தில் பிற கோளாறுகளும் மிகுந்து காணப்படுகின்றன. இவை இணைந்து வரும் குறைபாடுகள் (comorbidity) என்று அழைக்கப்படுகின்றன. இதனால், கூடா நண்பர்கள் போல ஒட்டிக்கொள்ளும் இந்த கோளாறுகளால் ஆட்டிசம் உள்ளவருக்கு ஏற்படும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.  ஆட்டிசம் பற்றி பலருக்கு குழப்பங்கள் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இவர்கள் இணைந்து வரும் குறைபாடுகளையும் ஆட்டிசத்தையும்  பிரித்துப் பார்க்காததே. மழையும் புயலும் வெவ்வேறாக வரலாம், இணைந்தும் வரலாம். ஆனால் மழை வேறு, புயல் வேறு.

இவ்வாறு இணைந்தும் வரும் குறைபாடுகளில் அறிவாற்றல் குறைபாடு, உடலியக்க ஒருங்கிணைப்புக் கோளாறு, கவனக்குறைவும் மிகைஇயக்கக் கோளாறும் (.டி.எச்.டி), வலிப்புநோய், ஆகியவை முக்கியமானவை. அத்தோடு, குழந்தைகளுக்கு பல உளவியல் தாக்கங்களும் உண்டாகின்றன. 

அறிவாற்றல் குறைபாடு (intellectual disability; mental retardation)

 

அறிவாற்றல் என்றால் என்ன? அறிவுடைமை, புத்திக் கூர்மை, அறிவு நுட்பம் ஆகிய சொற்கள் ஒருவருக்குள்ள அறிவாற்றலைச் சுட்ட பன்படுத்தப்படுகிறன. உளவியலில் இது நுண்ணறிவு (intelligence) என்று அழைக்கப்படுகிறது. சிந்திக்கும் திறன், ஒரு விஷயத்தை பகுத்தறிந்து புரிந்துகொள்ளும் ஆற்றல், எண்ணக்கருக்களை புறிந்துகொள்ளும் வல்லமை, கற்றுக் கொள்ளும்  திறமை போன்றவை இதில் அடங்கும்.

ஒரு மனிதனின் நுண்ணறிவை அளக்க பல வகையான உளவியல் சோதனைகள் உள்ளன. இவற்றில் இருந்து பெறப்படும் நுண்ணறி ஈவு (intelligence quotient; IQ) உளவியலில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு பொருள். ஆனாலும் ஒரு மனிதனின் அறிவாற்றலின் அளவை மதிப்பிட இது பயனுள்ளது சராசரியாக ஒரு மனிதனின் நு. . 100 புள்ளிகள் என்று கணக்கிடப்படுகிறது. மக்கட் தொகையில் ஏறத்தாழ 70% பேர் நு.ஈ 85 புள்ளிகளுக்க்கும் - 115 புள்ளிகளுக்கும் இடைப்பட்ட புள்ளிகள் கொண்டவர்களாக இருப்பர். ஒருவருக்கு நு.. 70 புள்ளிகளுக்குக் குறைவாக இருந்து அதனால் அவரது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் போது அது அறிவாற்றல் குறைபாடு (intellectual disanility; mental retardation) என்று வரையறுக்கப்படுகிறது. இது தமிழில் அற்றிவாற்றல் குறைபாடு என்றும் மனவளர்ச்சிக் குறைபாடு என்றும் வழங்கப்படுகிறது.

ஆட்டிசமும் அறிவாற்றல் குறைபாடும் ஒன்றல்ல என்று முன்னர் கூறினோம். அறிவாற்றல் குறைபாட்டில் ஏறக்குறைய எல்லாத் திறன்களும் குன்றி இருக்கும். பேச்சு, கற்கும் திறன், சமூகத் திறன், உடல் இயக்கத் ஆற்றல் போன்ற திறன்கள் யாவும் சராசரி அளவை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருக்கும். அறிவாற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பேச்சு வளர்ச்சி, எழுந்து உட்காருதல், நடத்தல் போன்ற உடல் இயக்கத் திறன்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். அதாவது இவர்களின் பெரும்பாலான வளர்ச்சி மைல்கல்கள் பின்தங்கி இருக்கும். இதுவே ஆட்டிசத்துக்கும் அறிவாற்றல் குறைபாட்டுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆட்டிசம் உள்ளவர்களில் ஏறத்தாழ அரைவாசிப்பேருக்கு அறிவாற்றல் குறைபாடு உண்டு [1]. அறிவாற்றல் குறைபாடும் அட்டிசமும் ஒருங்கு சேர்ந்து வரும்போது அது கன்னர் சின்றோம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆட்டிசத்ததின் கடுமையான ஒரு வகை.  ஆட்டிசத்தில் காணப்படும்  தனிப் பண்பு சமூக உறவாடலில் உள்ள குறைபாடுகளே (பார்க்க இயல் 2) என்பதை குழந்தைநல மருத்துவர்களும் மற்றவர்களும் நினைவில் நிறுத்திக் கொண்டால் இந்த தவறு ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும். 

உடல் ஒருங்கிணைப்பு வளர்ச்சிக் குறைபாடு (developmental coordination disorder)

 

உடல் ஒருங்கிணைப்புக் குறைபாட்டில் உடலில் உள்ள தசைகளில் இயக்கமும் ஒருங்கிணைப்புத் திறனும் பாதிக்கப்படுகிறது. பெரும் தசைகளில் அசைவு பாதிக்கப்படுவதால் நடத்தல், ஓடுதல், பாய்தல், போன்ற செயல்கள்களும் உடுத்தல், உண்ணல், தலை வாருதல் போன்ற அன்றாட செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இவர்கள் அடிக்கடி தடுக்கி விழுவதும் உண்டு. டிகளில் ஏறி இறங்க இவர்கள் சங்கடப்படலாம். விளையாடும் போது பந்தைப் பிடிப்பதும் வீசுவதும் இவர்களுக்கு கைவருவதில்லை. கையின் சிறு தசைகளும் சீராக இயங்குவதில்லை. விரல்களை நேர்த்தியாகப் பாவிக்க முடியாமையினால் எழுதுதல், கோர்த்தல், வரைதல், கத்தரிக்கோல் பாவித்தல் போன்ற செயல்கள் பாதிக்கப்படுகின்றன.

மிகுசெயல் கவனக்குறைவு கோளாறு (Attention Deficit Hyperactivity Disorder)

 

இதன் முக்கிய அறிகுறிகள் ஒரு செயலில் தொடர்ந்து கவனம் செலுத்த இயலாமை, ஒரு காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு விடுவது, தேவையற்ற வேறு செயல்களில் ஈடுபடுவது முதலியவையே. கூடவே, வரம்பு மீறிய இயக்க நிலை, அளவுக்கு அதிகமான துறுதுறுப்பும், மிகை இயக்கமும் பள்ளியில் இவர்களுக்கு பல பிரச்சினைகள் உண்டுபண்கிறது. எ டி எச் டி உள்ள ஒரு ஒரு ஐந்தாம் வகுப்புப் பையனை ஓர் ஆசிரியை பின்வருமாறு விவரித்தார்: “இவன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான்; கைகாலை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான், ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்; இருக்கையில் இருந்தாலும் இருப்புக் கொள்ளாது; நடக்க மாட்டான், ஓடுவான்". 

வலிப்புநோய் (epilepsy)

 

ஆட்டிசம் உள்ளவர்களிடையே வலிப்பு நோய் கூடுதல் அளவில் காணப்படுகிறது. மற்றவர்களை விட ஆட்டிசம் உள்ளவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு சாதரணமான குழந்தைகளை விட எட்டு டங்கு அதிகம் என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன [2]. ஆட்டிசம் உள்ளவர்களுக்கு வலிப்புநோய் எந்த வயதிலும் உண்டாகலாம். மதுசூதன் சீநிவாஸ் என்ற இந்திய ஊடகவிலாளர் தன் 23 வயதான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு கூறிகிறார்: "என் மகனுக்கு வலிப்புநோய் பதினொரு வயதில் ஏற்பட்டது. அவன் தன்னையறியாமல் தன் ஆடையில் சிறுநீர் கழித்துவிடுவான். இது அவனுக்குள்ள வலிப்புநோயால் ஏற்படுகிறது என்று அறிந்து கொண்டோம். அவன் முகம் சுழிப்பதை வைத்தே அவன் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டான் என்று எங்களால் கூற முடியும். ஆனால், மற்றவர்களின் நாற்காலியிலும், திரைப்படம் பார்க்கும் போதும் இது நடந்தால் இதை எவ்வாறு மற்றவர்களுக்கு விளக்குவது?" [3]

உளவியல் தாக்கங்கள்

 

ஆட்டிசம் உள்ளவர்களின் உளவியல் தேவைகள் பல. வளர வளர தாம் மற்றவர்களைப் போல இல்லை என்பதை  மெல்ல மெல்ல உணரத் தொடங்குகிறார்கள் தமக்கு ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என்பதை உணர்ந்து அதைத் அகவயமாக்கிக் கொள்கிறார்கள். இவே அவர்களின் தன்னடையாளமாகி, ஆட்டிசக் குறைபாடு அவர்களின் ஆளுமையில் ஓர் அங்கமாக பதிந்துவிடுகிறது
மேலும், பிற குழந்தைகளின் ஏளனம், ஆசியர்களின் கண்டனங்கள், பெற்றோரின் கடுஞ்சொற்கள் இவர்கள் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றவர்கள் தம்மை குறை உள்ளவர்களாக எடைபோடுகிறார்கள் என்பது இவர்களுக்கு பெரும் மனவேதைனை அளிக்கிறது. இதனால் தங்களையே வெறுக்கிறார்கள். இது அவர்களின் தன்மதிப்பையும் வெகுவாகப் பாதிக்கிறது. இதற்கு எதிர்வினையாக சிலர் பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், பொய் சொல்லுதல், சண்டை சச்சரவு போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவதுண்டு. வேறு சிலர், குறிப்பாக பெண்பிள்ளைகள், மனச்சோர்வு அடைவதுண்டு. எனவே ஆட்டிசம் உள்ளவர்களின் குறைநிறைகளை பெற்றோரும் ம் ஆசிரியர்களும் உணர்ந்து நடந்துகொள்வது முக்கியம்.

எனவே, ஆட்டிசத்தின் நேரடி பாதிப்பு ஒரு பக்கமிருக்க. அதனுடன் இணைந்து வரும் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள், ஆசிரியர், மருத்துவர், மனநலப்பணியாளர் ஆகியோர் றிந்துவைத்திருப்பதுயனுள்ளதாக இருக்கும். இதை கீழே தரப்பட்டுள்ள படம் விளக்குகிறது: 





[1] Nishiyama T.H., Taniai, et al., Genetic corelation between autistic traits and IQ in a population-based  sample of twins with autism spectrum disoders, Journal of Human Genetics, 54(1), 56-61.

[2] Sundelin, H.E.K, Larsson, H, Lichenstein et al. (2016) Autism and epilepsy: A population-based cohort study, Neurology, 87(2), 192-7.

[3] Srinivas M. (2016) Abhimanyu, Our son p. 98, In A book of light: when a loved one has a different mind (Ed. Pinto, J), Speaking Tiger Publishing, New Delhi.




Thursday, December 29, 2016





ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை 

இயல் 7. புலனுணர்ச்சி மாறுபாடுகள் 




நாம் நமது புற உலகை எமது ஐம்புலன்களினாலேயே உணர்ந்து கொள்கிறோம். புலன் உணர்ச்சி எனப்படுவது சுவை, மணம், ஒளி, தொடு உணர்ச்சி,  ஒலி  ஆகிய தூண்டுதல்கள் எமது புலன் உறுப்புக்கள் வழியாக  சூழ்நிலையிலிருந்து வரும் செய்திகளை அறிந்துகொள்வ்அதைக் குறிக்கிறது. கண், மூக்கு, வாய், காது, தோல் ஆகிய புலன்களின் வழியே நாம் பெறும் அடிப்படைத் தகவல்கள் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. சாதாரணமாக இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால், நாம் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.

ஆனால், சில வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள சிறார்களில்  இந்த புலணுனர்வு மிகையாக அல்லது குறைவாக இருக்கலாம் (hypersensitivity / hyposensitivity). ஆட்டிசம் உள்ள எல்லோருக்கும் இம்மாதிரியான பாதிப்புகள் இருப்பதில்லை,  ஆனால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 30 சத விகிதத்தினருக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இருப்பதுண்டு. இது அவர்களின் நடத்தையை சில சமயங்களில் வெகுவாகப்பாதிக்கலாம் [1].


மிகையான புலனுனர்வு 

ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டு கேட்பதே கூடுதல் அளவில் ஆட்டிசத்தில் காணப்படும் புலனுணர்வு மாறுபாடு பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்:
 
குழந்தைவேல் ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவன். சில வேளைகளில் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது திடீரென அலறிக் கொண்டு வகுப்பைவிட்டு வெளியே ஓடுவான். ஏன் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. இது ஆசிரியருக்கு பெரும் தொல்லையாய் இருந்தது. அவனுக்கு ஏதோ நோய் உள்ளது என்று எண்ணி ஒரு குழந்தை நல மருத்துவரைப் பார்க்கப் போனார்கள். சோதித்துப் பார்த்ததில் குழந்தைவேலுக்கு ஆட்டிசம் இருந்தது தெரிய வந்தது. ஆனாலும் அவன் வகுப்பை விட்டு வெளியே ஏன் ஓடுகிறான் என்று அறிய முடியவில்லை. இது அடிக்கடி நிகழ்வதால் பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது என்று வகுப்பு ஆசிரியர் முறையிட்டார். அவனை பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வேண்டினார். இறுதி முயற்சியாக, ஒரு குழந்தை னநல மருத்துவரின் ஆலோசனை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. அவன் என்னென்ன சந்தர்ப்பங்களில் வகுப்பை விட்டு வெளியே ஓடுகிறான் என்பதை மருத்துவர் ஆழமாக ஆராய்ந்து பார்த்தார். இதிலிருந்து, அடுத்த வகுப்பில் பேச்சுப்போட்டி நடக்க ஆயத்தங்கள் செய்யும் வேளைகளில் மட்டுமே குழந்தைவேல் வெளியே ஓடும் சம்பவம் நடைபெறுகிறது என்பது தெரியவந்தது. அப்போது நாட்காலிகளை ழுப்பதும் ஒழுங்கு செய்வதுமாக பெரும் ப்தம் ஏற்படும். அம்மாதிரியான சமயங்களில் மட்டும்தான் அவன் வகுப்பை விட்டு வெளியேறுகிறான் என்று அறியப்பட்டது. கிறீசிடும் ஒலிகள் அவனுக்கு பெரும் வேதனை அளித்தன என்பதையும் அடையாளம் காண முடிந்தது. (இம்மாதிரியான ஆய்வு 'நடத்தை புகுப்பாய்வு' behaviour analysis என்று அழைக்கப்படுகிறது. இதை இன்னொரு இயலில் பார்ப்போம்).

ஆட்டிசம் உள்ள சிலருக்கு சில புலன் உணர்ச்சிகள் அளவுக்கு அதிகமாக கூர்மைமையாக உள்ளதால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நமக்குள்ள ஐம்புலன்களான பார்வை, செவிப் புலன், மணம், தொடு உணச்சி, சுவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இவர்களுகுள்ள உணர்வு மற்றவர்ளை விட மிகையாகவும் கூர்மையாகவும் இருக்கக் கூடும். எனவே மற்றவர்களுக்கு தொல்லை தராத ஒலி, ஒளி, சுவை போன்ற தூண்டல்கள் இவர்களுக்கு கடும் வேதனை தரலாம். இதனால், அன்றாடம் கேட்கும் ஒலிகளான மணியோசை, மின்சாதனங்களின் இரைச்சல், வாகனங்களின் உறுமல் போன்ற ஒலிகள் இவர்களுக்கு பெரும் மனசஞ்சலத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கலாம்.

தொடு ஊணர்ச்சி மிகையான உள்ளவர்கள் மற்றவர்கள் தங்களைத் தொடுவதையோ அணைப்பதையோ விரும்புவதில்லை. அவர்களிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதேபோல, மற்றவர்களால் உணர முடியாத மணங்கள் ஆட்டிசம் உள்ள சிலருக்கு பெரும் துன்பம் தரலாம். உதாரணமாக, இன்னொருவரின் சாதாரண உடல் மணம் இவர்களுக்குத் துர்நாற்றமாத் தோன்றலாம். ஆட்டிசம் உள்ள சில குழந்தைகள், “உன் வாய் நாறுகிறது" என்று வெளிப்படையாகவே கூறிவிடுவார்கள்!

குறிப்பிட்ட சில உணவுகளை இவர்கள் வெறுப்பதற்கு அவற்றின் தொடு உணர்ச்சி. சுவை அல்லது நிறம் காரணமாக இருக்கலாம். இதனால் சொத சொதப்பான உணவுகளை சிலர் தவிர்க்கலாம். சிலர் காரமான உணவுகளை வெறுப்பதற்கு மிகையான புலனுணர்வு காரணமாக இருக்கலாம். 

ஆட்டிசம் உள்ள சில குழந்தைகள் காரணமில்லாமல் சதா அழுவதுண்டு. இதை ஆராய்ந்து பார்த்தால் எதோ ஒரு மிகை உணர்வு இவர்களைத் துன்பப்படுத்துகிறது என்று தெரியவரும். ஆட்டிசம் உள்ள சிலர் வழக்கத்துக்கு மாறாக நடந்து கொள்வதற்கும், (மேலே கூறப்பட்ட குழந்தைவேல் போல) திடீரென நிலை குலைந்து போவதற்கும், விநோதமாக நடந்து கொள்வதற்கும் அவர்களுக்குள்ள மிகை உணர்வு காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏற்படும் திடீர் புலனுணர்வுத் தாக்கத்தால் இவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். இது புலனுணர்வுச் மிகுசுமை (sensory overload) என்றும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தாறுமாறாக நடந்துகொள்வது (meltdown) என்றும் அழைக்கப்படுகிறது. இதை அறிந்து கொண்டால் பல அசம்பாவிதங்களைத் தவிக்கலாம்.

குறைவான புலனுணர்வு


இதற்கு நேர்மாறாக, ஆட்டிசம் உள்ள சிலருக்கு புலணுனர்வு  குறைவாக இருக்கும். சிலர் வலியை அவ்வளவாக உணர்வது இல்லை. விழுந்து காயப்படுத்திக் கொண்டாலும் அழுவது இல்லை. தொடு உணர்ச்சி குறைவாக உள்ளவர்கள் கம்பளம் அல்லது மென்மையான ஒரு விளையாட்டுப் பொருளை எப்போதும் கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சில வேளைகளில் சந்தர்ப்பம் சூழ்நிலை பார்க்காமல் மற்றவர்களைத் தொடுவதும் உண்டு

ஆட்டிசம் உள்ள சில குழந்தைகள் சதா உடம்பை அசைத்துக் கொண்டும் ஆட்டிக்கொண்டு இருப்பதும் குறைவான உடல் உணச்சியை ஈடு செய்யத்தான். சிலர் உடலைக் காயப்படுத்திக் கொள்வதற்குக் காரணம் அவர்கள் அந்த வலி உணர்வை அனுபவிக்க விரும்புவதான். சுழலும் விளையாட்டுப் பொருட்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதற்கும் புலனுணர்ச்சிக் குறைபாடு காரணமாக இஅருக்கலாம்.  

இவ்வாறு, விசித்திரமாகத் தோன்றும் சில பழக்க வழக்கங்களுக்கு மிகை உணர்வோ குறை உணர்வோ காரணமாக இருக்கலாம். இதை கண்டுபிடித்து ஆராய்ந்து சுற்றுப்புற சூழலில் தேவையான மாற்றங்ளைச் செய்வது முக்கியம். அதேபோல, குறை உணர்வு அல்லது மிகை உணர்வு உள்ளவர்களுக்கு தொழில்வழிச் சிகிச்சை (occupational therapy) வழியாக உணர்வுகளை சீராக்கலாம். வயது போகப் போக மிகையுணர்வு சீர்பட்டுவிடுகிறது என்பது ஒரு நற்செய்தி.

இங்கே கூறப்பட்ட மிகை உணர்வும் குறை உணர்வும் ஆட்டிசத்தில் மட்டும் காணப்படும் சிறப்பு அறிகுறிகள் அல்ல என்பதை திரும்பவும் விலியுறுத்த வேண்டும். இப்பண்புகளை பல வளர்ச்சிக் குறைபாடுகளில் காணலாம். குறிப்பாக, அறிவாற்றல் குறைபாடு உள்ள பல குழந்தைகளுக்கு மிகை உணர்வும் குறை உணர்வும் காணப்படுவதுண்டு

துவரை ஆட்டிசத்தின் முக்கிய பண்புகள் விவரிக்கப்பட்டன. அடுத்து ஆட்டிசத்தோடு ஒட்டிக்கொண்டு வரும் பிறகுறைபாடுகளைக் காண்போம்.



[1] Dunn. W. (2005) The sensations of everyday life: Empirical, theoretical and pragmatic considerations, American Journal of Occupational Therapy, 55, 6, 608-620. 


Wednesday, December 28, 2016


    ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை 

    இயல் 6. தொடர் செயல்கள், இறுக்கமான பழக்க வழக்கங்கள், மாற்றத்தை விரும்பாத போக்கு


ந்த தலைப்பின் கீழ் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடையே காணப்படும் பல விதமான அசாதாரண செயல்களையும் வழக்கத்துக்கு மாறான நடத்தைகளையும் ஆராய்வோம். இப்பண்புக் கூறுகள் யாவும் வளர்ச்சிப் போக்கில் எல்லா குழந்தைகளிடமும் ஏதோ ஒரு சமயத்தில் ஓரளவுக்குக் காணக்கூடியவைதான் [1]. ஆனால் ஆட்டிசத்தில் இவை மிகையாகவும் பொருத்தமில்லாதவையாகவும் இருக்கும். இதுவே ஆடிசம் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு [2].

தொடர் செயல்கள், பழக்கவழக்கங்கள் (repetitive and stereotypic behaviours):

ஆட்டிசம் உள்ளவர்களிடையே ஒரே செயலைத் திரும்பச் செய்யும் நடைமுறைகள் காணப்படும். உணர்ச்சி வசப்படும்போது உடலை முன்னும் பின்னுமாக சதா ஆட்டுவது (rocking), கைகளைத் தட்டி  அசைப்பது (handflapping), பறவை போல கையசைத்து சுற்றிச் சுற்றி ஓடுவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவார்கள். சிலர் திரும்பத் திரும்ப கடித்துக் கைகளைக் கொள்வதும் உண்டு. இவை ஒரே தன்மை கொண்ட செயல்கள் (stereotypic behaviours) என்று அழைக்கப்படுகின்றன. பொருள்களை திருப்பத் திரும்ப வரிசைப்படுத்தி விளையாடுவதும், சுற்றக் கூடிய ஒரு பொருளை சுற்றிச் சுற்றிஅதில் மனம் லயித்து போவதும் இதில் அடங்கும். இம்மாதிரியான செயல்களை பெற்றோர்கள் தடுத்து நிறுத்த முயன்றால் இவர்கள் எதிர்த்துப் போராடுவதுண்டு


குறிப்பிட்ட சில விஷயங்களில் அபாரமான ஈடுபாடு, வழக்கத்துக்கு மாறான நாட்டங்கள் (preoccupationss and unusual interests)

 ஆட்டிசம் உள்ளவர்களுக்கு  சில விஷயங்களில் ஒரு அசாதாரண ஈடுபாடு இருக்கும்.  இவை மற்றவர்களுக்கு உள்ள சாதாரண ஈடுபாடுகள் போலத் தோன்றலாம்அனால் அவை அசாதாரணமாக இருக்கும்.அதைப்பற்றி தகவல்கள் சேகரிப்பார்கள், அதைப்பற்றி பேசுவதில் இன்பம் காணுவார்கள். கடும் ஆட்டிசம் ஊள்ளவர்கள் பயனற்ற பொருட்களில் அசாதாரணமான ஆர்வம் காட்டுவார்கள். 

மிதமான ஆடிசம் உள்ளவர்களுக்கு பள்ளிப் பருவத்தில்  விளையாட்டுப் போட்டிகள், உலக நாடுகள், திரைப்பட நடிகர்கள், கட்டிட வகைகள்,  போன்ற ஏதாவது ஒரு பொருள்பற்றி ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக் இருப்பார்கள். இவறறைப் பற்றி ஆராய்த்தறிந்து நிறைய தகவல்கள் சேகரித்து வைத்திருப்பார்கள். உதாரணமாக, மிதமான அட்டிசம் உள்ள ஒரு 10 வயதுப் பையன் உதைப்பந்தாட்ட உலகக் கோப்பைக்கான போட்டியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெற்றி பெற்ற எல்லா அணிகளைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வைதிதிருந்தான், ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வயது, எடை, உயம் உட்பட! ஆனால் அவன் உதைப் பந்தாட்ட போட்டிகளை தொலைக் காட்சியில் கூட பார்ப்பதில்லை. இன்னொரு பையன் உலக நாடுகளின் கொடி, மக்கட் தொகை, பரப்பளவு ஆகிவற்றை தேடிக் கண்டுபிடித்து அதை வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூறி பாராட்டும் பெற்றான், ஆனால், புவியியல் பாடத்தில் அவனுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. இம்மாதிரியாக இவர்கள் தமக்குப் பிடித்த விஷயங்களில் தகவல் களஞ்சியமாக விளங்குவார்கள். ஆனால் நடைமுறையில் இது அவர்களுக்கு உதவுவதில்லை. மேலும் அவர்கள் வாசிப்பது தகவல்களைத் திரட்டிக்கொள்ளவே. வாசிப்பு அனுபவதுக்காக அல்ல.

ஆட்டிச பாதிப்பு மிதமாக் உள்ளவர்களுக்கு வயதுக்கு ஏற்ற சில விஷயங்களிம் ஈடுபாடு இருக்கும். ஆனால் இது தம் வயதை ஒத்தவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை விட  மிகையாகவ இருக்கும். ஆட்டிச பாதிப்பு உள்ள ஒரு பத்து வயதுப் பையனுக்கு வீட்டுக் கதவுகள் பற்றி பெரும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்குப் போகும் வழியில் இருந்த வீடுகளின் கதவுகளை அச்சு மாற்றாமல் வரைந்து சேர்த்து வைத்திருந்தான். பின் வீடுகளை வரையத் தொடங்கினான்அவன் அறையில் பெட்டி பெட்டியாக அந்த படங்களை சேகரித்து வந்தான். மற்றவர்கள் அந்தப் படங்களைத் தொட்டால் அவனுக்கு பெரும் கோபம் வரும். பிற்காலத்தில் அவன் கட்டிட உருவப்படங்கள் வரைவாளராக பயிற்சி பெற்று இப்போது ஒரு முன்னணி கட்டிட நிறுவனத்தில் பணி புறிகிறான்!.

இறுக்கமான பழக்க வழக்கங்களும் ((rigidity) நடைமுறை ஒழுங்குகளும் (routines), மாற்றத்தை விரும்பாத போக்கும் (resistance to change):

அன்றாட வாழ்க்கையில் இவர்களுக்கு சில ஒழுங்கு முறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவார்கள். உணவுகளை குறிப்பிட்ட ஒழுங்கில் சாப்பிடுவது, உறங்கப் போகும்போது குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது, பள்ளிக்குப் போவதில் சில வழக்கங்களைக் கடைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை இறுக்கமாக கடைப்பிடிப்பார்கள். அதில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால் நிலைகுலைந்து போவார்கள். வேறொருவர் வீட்டிற்கு விருந்தினராகப் போய் தங்குவது இவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும்.  உதாரணமாக, ஒரு பையன் வழக்கமாக் பள்ளிக்கூடத்துக்கு போகும் வழி வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. அவன் நண்பர்கள் வேறொரு வழியாகப் போனார்கள். ஆனால் அவன் அவ்வழியாக வர முடியாது என்று அடம் பிடித்தான். இறுதியில் அன்று பள்ளிகூடத்துக்குப் போகாமல் வீடு திருபினான்.

ஆட்டிசம் உள்ள ஒரு பத்து வயதான பையன் சப்பாத்தியைத் தவிர வேறு எந்த உணவையும் சாப்பிடும் பழக்கம் இருக்கவில்லை. அதுவும் முறுமுறுப்பாக இருக்க வேண்டும், நன்கு கடைந்த பருப்போடு மட்டுமே சாப்பிடுவான். வேறு உணவுப்பொருட்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இது அவன் பெற்றோருக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதாவது, இந்த பழக்கத்தை உறுதியாக பற்றிக் கொண்டிருந்தான். இதேபோல, ஆட்டிசம் உள்ளவர்கள் வேறு சூழ்நிலைகளிலும் மாற்றங்களை விரும்புவதில்லை. ஒரு புதிய வகுப்புக்கு போவது, ஒரு புதிய ஆசிரியரின் வருகை போன்ற சாதாரண மாறுதல்கள் இவர்களுக்கு பெரும் பிரச்சினைகளாக அமைந்துவிடுகின்றன

சில சமயங்களில் இவை விநோதமாக இருக்கும்.  உதாரணமாக, ஆட்டிசம் உள்ள ஒரு பத்து வயது பெண் குழந்தை சங்கீதம் கற்பதற்கு ஓர் ஆசிரியையிடம் போவது வழக்கம். அவள் தகப்பனார் அவளை காரில் அழைத்துக்கொண்டு போய் ஆசிரியையின் வீட்டின் வாசலில் விட்டுச் சொல்வார், இவள் வீட்டு படிகளில் ஏறிப்போய் கதவைத் தட்டுவாள். ஒரு பணிப்பொண் வந்து கதவைத் திறப்பாள். இதுதான் வழக்கம். ஒரு நாள் அவள் கதவைத் தட்டுமுன் இன்னொரு மாணவி கதவைத் திறந்து வெளியே வந்தாள். இந்தப் பெண் குழந்தை அந்த கதவின் வழியாக உள்ளே போகாமல் படியிலிருந்து இறங்கி வந்து, மீண்டும் போய் கதவைத் தட்டினாள். பணிப்பெண் வந்து திறந்ததும் உள்ளே போனாள். இதே போல, பள்ளிக் கூடத்துக்கு போகும்போது அதே வழியாகப் போவது, உறங்கப் போகு முன் தலையணையும் போர்வையை குறிப்பிட்ட முறையில் ஒழுங்குபடுத்துவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள்.

இவர்களைப் பொருத்தவரையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். இதனால் அவர்களுக்கு ஒரு ஆறுதல் ஏற்படுகிறது. இவர்கள் நிச்சயமற்ற தன்மையை விரும்புவது இல்லை. அட்டிசம் உள்ள 14 வயதுப் பையன் ஒருவன் ஒரு நாள் குடும்பத்துடன் காரில் உறவினர் வீடுக்குக் போய்க் கொண்டிருந்தான். “எப்போது அவர்கள் வீடு வரும்?” என்று திரும்பத் கேட்டு தகப்பனாரை நச்சரித்துக்கொண்டு இருந்தான். அவன் தொல்லை பொறுக்க முடியாமல் அவர் அவனுக்கு விருப்பமான ஒரு குறுந்தட்டைப் போட்டு அதில் பாட்டுகள் முடியும்போது உறவினர் வீடு வந்துவிடும் என்று அவனை சமாதனப்படுத்தினார். ஆனால் கெடுவாய்ப்பாக வழியில் வாகன நெரிசல் கூடுதலாக இருந்தது. பாட்டுகள் முடிந்தும் வீடு போய் சேரவில்லை. அவனுக்குக் கடும் கோபம் வந்தது. தாறுமாறாக அவன் தந்தையைத் திட்டினான். காரின் கதவைத் திறந்து வெளியே பாய எத்தனித்தான். “நீ சொல்லுவது எல்லாம் பொய், என்னை ஏமாற்றிவிட்டாய்"என்று பெரும் கூப்பாடு போட்டான். ஏன்? அவனால் தனக்கிருந்த முந்திய எண்ணத்தை ("பாட்டு முடிந்ததும் வீடு வரும்") மாற்றிக்கொள்ள முடியவில்லை.

எண்ணங்களும் சிந்தைனகளும் இறுக்கமாக, நெகிழ்வற்றவயாக, மாற்றிக்கொள்ள முடியாதவையாக இருப்பதே இதற்குக் காரணம். இது அறிதிறன் இறுக்கம் (cognitive rigidity) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே, இவர்கள் உண்டு - இல்லை, கருப்பு - வெள்ளை என்று இருமையில் சிந்திப்பவர்கள். இதனால் ஒரு விஷயத்தை வேறொரு கோணத்தில் இருந்து நோக்குவதில்லை. சில சமயங்களில் இரு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் விசனத்தை அளிக்கலாம். 

துவரை ஆட்டிசத்தின் முப்பெரும் பண்புகளைப் பார்த்தோம். அடுத்து, ஆட்டிசம் உள்ள சிலரிடம் மட்டுமே காணப்படும் புலனுணர்வுப் பிரச்சினைகளை ஆராய்வோம். 

[1] Evans D.W., Leckman J.F., Carter A. et al (1997). Ritual, habit and perfectionism: The prevalence and development of compulsive-like behaviour in normal young children, Child Development, 68, 58-68.

[2] Bodfish J.W., Symons, F.J., Parker D.E. et al. (2000). Varieties of repetitive behaviours in autism: Comparison to mental retardation, Journal of Autism and Developmental Disorders, 30, 237-243.